(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
பெருந்தோட்ட மக்களுக்கு வாக்களித்த பிரகாரம் நாங்கள் ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். அதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களே பொய் காரணங்களை தெரிவித்து வருகின்றனர். கம்பனி காரர்கள் வேலை வழங்கும் நாளை குறைத்தால் அது தொடர்பாகவும் நாங்கள் செற்படுவோம் என ஆளுங்கட்சி உறுப்பினர் ம.ராமேஷ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொழில் அமைச்சின் கீழ் ஊழியர் சகாய நிதியச்சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அவர்களது 5 வருட ஆட்சியில் 50 ரூபாவைக்கூட அவர்களால் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனது.
அதன் பிரகாரம் கடந்த தேர்தலில் பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபா பெற்றுக் காெடுக்கப்படும் என எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வாக்குறுதி அளித்திருந்தார். அதன் பிரகாரம் அதனை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கின்றோம். மேலும் இந்த ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக கம்பனி காரர்களுடன் 20 க்கும் மேற்பட்ட சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தோம்.
ஆயிரம் ரூபா வழங்குவதற்கு சூழ்நிலை இல்லை என அவர்கள் தெரிவித்ததன் பின்னர்தான் தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுடன் கலந்துரையாடினோம். அதன் தீர்வாகவே சம்பள நிர்ணய சபையுடன் கலந்துரையாடி 900 ரூபா அடிப்படைச் சம்பளமும் 100 ரூபா வாழ்க்கைச் செலவாகவும் வழங்க வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் 23 கம்பனிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றோம். அவர்கள் ஆயிரம் ரூபா வழங்குவதாக இருந்தால் 13 நாட்கள்தான் வேலை வழங்க முடியும் என ஒருபோதும் கூறியதில்லை. அதேபோன்று கூட்டு ஒப்பந்தத்தில் இருக்கும் நிபந்தனைகளில் இருந்து ஒதுங்கப் போவதாகவும் அவர்கள் எங்களிடம் கூறியதில்லை.
எதிர்க்கட்சியினர்தான் கம்பனிகாரர்களுக்காக பேசி வருகின்றனர். நாங்கள் ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுத்ததை பொறுத்துக் கொள்ள முடியாமலே இவர்கள் இவ்வாறு கூறி வருகின்றனர்.
அத்துடன் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திருப்பதும் அபிவிருத்திகளை மேற்கொண்டு வந்ததும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலாகும். தற்போது ஆயிரம் ரூபா பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்திருப்பதும் இந்த அரசாங்கத்திலாகும்.
அதற்காக ஜனாதிபதி, பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு பதிலாக கம்பனி காரர்களுக்கு சார்பான விடயங்களை எதிர்க்கட்சியினர் கதைத்து வருகின்றனர் என்றார்.
No comments:
Post a Comment