பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் பிரதமர் மஹிந்தவிடமே இருக்கும், ஜனாதிபதி கோத்தாபய அரசியல் கட்சி அடிப்படையில் செயற்படமாட்டார் - பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 10, 2021

பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் பிரதமர் மஹிந்தவிடமே இருக்கும், ஜனாதிபதி கோத்தாபய அரசியல் கட்சி அடிப்படையில் செயற்படமாட்டார் - பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது அமைச்சர் விமல் வீரவன்சவின் தனிப்பட்ட நிலைப்பாடாகும். தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை கிடையாது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று வெளியாகியுள்ள செய்தி குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவமாக கொண்டே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எழுச்சிப் பெற்றது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மீண்டும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் செல்வாக்கு செலுத்த வேண்டும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்தார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு பொதுஜன பெரமுன தோற்றம் பெற்றது.

2016 ஆம் ஆண்டு பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது. 1 வருட காலத்துக்குள் இரண்டு பிரதான கட்சிகளை வீழ்த்தி பெற்றி பெறுவது சாதாரண விடயமல்ல. மஹிந்த ராஜபக்ஷவின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த அபிப்ராயம் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மக்கள் வழங்கிய ஆதரவுடன் வெளியானது.

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே வெற்றி பெற்றது. 

பொதுஜன பெரமுனவின் தலைமைத்தவத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அவரது தனிப்பட்ட கருத்தினை மாத்திரம் வெளிப்படுத்தியுள்ளார். இவரது கருத்து கட்சிக்குள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசியல் கட்சி அடிப்படையில் செயற்படமாட்டார். ஆகவே அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்ட கருத்துக்கும் ஜனாதிபதிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. கட்சியின் தலைமைத்துவத்துவத்தில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலின் வெற்றியை நோக்கமாக கொண்டு பொதுஜன பெரமுன நாடு தழுவிய மட்டத்தில் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளது. மாகாண சபை தேர்தலிலும் பொதுஜன பெரமுன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி போட்டியிட்டு அமோக வெற்றி பெறும் என்றார்.

No comments:

Post a Comment