பதுளை மாநகர சபையின் அனைத்து செயற்பாடுகளும் இடை நிறுத்தப்பட்டு வர்த்தமானி வெளியீடு - சட்டம் மீறப்பட்டுள்ளதா என ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

பதுளை மாநகர சபையின் அனைத்து செயற்பாடுகளும் இடை நிறுத்தப்பட்டு வர்த்தமானி வெளியீடு - சட்டம் மீறப்பட்டுள்ளதா என ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆளுகையின் கீழுள்ள, பதுளை மாநகர சபையின் அனைத்து செயற்பாடுகளும் இடை நிறுத்தப்பட்டு, அச்சபையின் அனைத்து அதிகாரங்களும் விசேட ஆணையாளரின் பொறுப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இத தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய பதுளை மாநகர சபையின் பொறுப்புகள் யாவும் இன்று (11) முதல் விசேட ஆணையாளரின் கீழ், கொண்டுவரப்படுவதாக, குறித்த வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாநகர சபைக் கட்டளைச் சட்டத்தின் பிரிவுகளுக்கு முரணான வகையில், நகர பிதா உள்ளிட்ட சபை நடந்து கொண்டுள்ளதா என்பது தொடர்பில் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் விசாரணை செய்து அறிவிக்குமாறு ஓய்வு பெற்ற நீதவான் நீதிபதி எச்.எம்.ஆர். அநுரகுமாரவை நியமிப்பதற்கான அறிவிப்பும் குறித்த அதி விசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாநகர மேயருக்கு பெரும்பான்மை பலம் இல்லாமையினால், சபையின் அனைத்து செயற்பாடுகளும் இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக, ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியின் கீழ், பதுளை மாநகர சபை இயங்கி வந்தது. அதன்படி பதுளை மாநகர மேயர் பதவி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசமும், பிரதி மேயர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வசமும் இருந்து வந்தன.

அதனையடுத்து, இவ்விரு கட்சிகளும் தலா இரண்டு வருடங்கள் எனும் அடிப்படையில் நகர பிரதாவுக்கான பதவியை வகிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் பதுளை மாநகர சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட்ட நிலையில், மாநகர சபையின் பலத்தை, அதன் நகர பிதா பிரியந்த அமரசிறி இழந்திருந்தார்.

இதனாலேயே, தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி அறிக்கை மூன்று முறைகளும் தோல்வி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, மேயர் பிரியந்த அமரசிறியிடம் வினவிய போது, அவர், 'எனக்கு சபையில் பெரும்பான்மை பலம் இல்லாதிருப்பது உண்மைதான். சபையின் இந்நிலைக்கு சபையின் சகலருமே பொறுப்பேற்க வேண்டும். ஏற்பட்டிருக்கும் நிலைமைக்கு, மாகாண ஆளுநர் எடுத்துள்ள முடிவு நியாயமானதேயாகும்' என்றார்.

(பதுளை விசேட நிருபர் - எம். செல்வராஜா)

No comments:

Post a Comment

Post Bottom Ad