ஆயிரம் ரூபா என்ற இலக்கத்தை காட்டி அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளது, இதன் பின்னால் மறைந்த இரகசியங்கள் உள்ளன அவற்றை வெளியிட வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 9, 2021

ஆயிரம் ரூபா என்ற இலக்கத்தை காட்டி அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளது, இதன் பின்னால் மறைந்த இரகசியங்கள் உள்ளன அவற்றை வெளியிட வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள ஆயிரம் ரூபா சம்பளத்தின் ஊடாக தற்போது தொழிலாளி ஒருவருக்கு வருடாந்தம் கிடைக்கும் சம்பளத்திலும் பார்க்க 69 ஆயிரம் ரூபா குறைவான சம்பளமே கிடைக்கவுள்ளது. ஆயிரம் ரூபா என்ற இலக்கத்தை காட்டி அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்றி இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதேவேளை சம்பள நிர்ணய சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை ஊடாக கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் இதுவரை கிடைத்து வந்த தொழிலாளர்களுக்கான சலுகைகளும் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொழில் அமைச்சின் கீழ் ஊழியர் சகாய நிதியச்சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதாக தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்திருந்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாது ஒரு வருட காலம் அந்த மக்களை ஏமாற்றியது. 

அத்துடன் கடந்த வரவு செலவுத் திட்டத்திலும் அதனை வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் இன்னும் அது நடக்கவில்லை. 2021 ஜனவரி 28 ஆம் திகதி கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற நாள் முதல் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளது.

தற்போது சம்பள நிர்ணய சபையின் ஊடாக 900 ரூபா அடைப்படை சம்பளத்தையும், 100 ரூபா கொடுப்பனவையும் வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் ஆயிரம் ரூபா வாக்குறுதியின் பின்னால் மறைந்த இரகசியங்கள் உள்ளன. அவற்றை வெளியிட வேண்டும்.

அன்று 750 ரூபா அடிப்படை சம்பளத்துடன் வருடத்திற்கு 300 நாட்களுக்கு வேலை வழங்க தோட்டக் கம்பனிகள் கூட்டு ஒப்பந்தத்தில் இணக்கம் வெளியிட்டிருந்தன. அதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வருடத்துக்கு 2 இலட்சத்தி 25 ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கின்றது.

ஆனால் இப்போது ஆயிரம் ரூபா சம்பளமானது மாதத்துக்கு 13 நாட்களே தொழில் வழங்கப்படுகின்றது. வருடத்துக்கு 156 நாட்களே தொழில் வழங்கப்படும் என்பதுடன் வருடத்துக்கு 156,000 ரூபா சம்பளமே கிடைக்கும்.

இதன்படி வருடத்திற்கு தொழிலாளியொருவர் 69 ஆயிரம் ரூபாவை இழக்கும் நிலைமை ஏற்படும். இதனை மறைத்தே இந்த ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படவுள்ளது.

அதேபோன்று சம்பள நிர்ணய சபையின் ஊடாக வழங்கப்படும் முறையின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது இருக்கும் 28 சிறப்புச் சலுகைகள் இல்லாமல் போகும். அதனால் ஆயிரம் ரூபாவை வழங்குவதில் தவறில்லை. 

ஆனால் அதனை வழங்கும் போது கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் சிறப்புச் சலுகைகளையும் வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கத்தின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பானது, தோட்டத் தொழிலாளர்கள் அடுப்படியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகவே முடியும். இருந்த நிலைமையை விடவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் நிலைமையே ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment