மலையக மக்களின் உரிமைக்காக வீதிக்கிறங்கி போராடவும் தயார், எதிர்தரப்பில் உள்ளவர்கள் ஊடக பேச்சாளர்கள் போல் பேசுகிறார்கள் - செந்தில் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 9, 2021

மலையக மக்களின் உரிமைக்காக வீதிக்கிறங்கி போராடவும் தயார், எதிர்தரப்பில் உள்ளவர்கள் ஊடக பேச்சாளர்கள் போல் பேசுகிறார்கள் - செந்தில் தொண்டமான்

(இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேலை நாட்கள் 13 நாட்களாக மட்டுப்படுத்தப்படமாட்டாது. இலக்கை அடைந்த பிறகு எதிர்க்கட்சியில் உள்ள தொழிற்சங்கங்கள் பெருந்தோட்ட கம்பனிகளின் ஊடக பேச்சாளர்கள் போல் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். பெருந்தோட்ட மக்களின் உரிமைக்காக போராடவும் தயார் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் சிறந்த தீர்வை பெற்றுள்ளோம். முத்தரப்பு பேச்சுவார்த்தை ஊடாக சாதகமான பதில் கிடைக்கப் பெற்றது. பெருந்தோட்ட கம்பனிகளின் நிபந்தகைளுக்கு அடிபணியவில்லை.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் எதிர்தரப்பில் உள்ள மலையக தொழிற்சங்கத்தினர் இதுவரை காலமும் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டதுடன் வேலை நாட்கள் 13 நாட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்தரப்பில் உள்ள தொழிற்சங்கத்தினர் கம்பனிகளின் ஊடக பேச்சாளர்கள் போல் பேசுகிறார்கள்.

13 நாட்கள் மாத்திரம் வேலை என்றால் மிகுதி 17 நாட்கள் யாரை கம்பனிகள் வேலைக்கு அமர்த்தும்? வெளிபகுதியில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தோட்ட தொழிலாளர்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள். வெளியாட்களை வேலைக்கமர்த்துவதால் கம்பனிகளே பாதிக்கப்படும். ஆகவே 13 நாட்கள் மாத்திரம் வேலை என்பது வெறும் வதந்தியாகும்.

மலையக மக்களின் உரிமைக்காக வீதிக்கிறங்கி போராடவும் தயாராகவுள்ளோம். ஆட்சியதிகாரம் எதுவும் இல்லாத காலத்தில் கூட பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளோம். அந்த வலு தற்போதும் உள்ளது. மலையக மக்களின் உரிமைகளை பாதுகாக்க அதிகாரத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

பெருந்தோட்ட கம்பனிகள் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயத்திற்கு புறம்பாக செயற்பட இடமளிக்க முடியாது. வழமைக்கு அமைவாகவே கம்பனிகள் செயற்பட வேண்டும். முரணாக செயற்பட்டால் தோட்ட தொழிலாளர்களும் வழமைக்கு மாறாக முரணாக செயற்படுவார்கள் என்றார்.

No comments:

Post a Comment