(எம்.மனோசித்ரா)
2021 ஆரம்பிக்கும் போது காணப்பட்ட கொரோனா பரவல் அபாயம் தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலைமை அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லாமலிருப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டும். பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு குறைவடைந்துள்ளமையே தொற்றாளர்கள் எண்ணிக்கையும் குறைவாக காண்பிக்கப்படுகிறது. எனவே நாட்டில் அபாயம் குறைவடைந்துள்ளது என கருத முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பதுளை கிராம பகுதிகளிலும் அபாயம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தொழிற்சாலையை அண்மித்த பகுதிகளிலேயே இவ்வாறு அபாயம் அதிகரித்துள்ளது. இந்த பகுதியிலுள்ள தொழிற்சாலையில் 1,650 பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.
இங்கு இனங்காணப்படும் தொற்றாளர்கள் மஹியங்கனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். எனினும், அந்தளவு தொற்றாளர்களை பராமரிப்பதற்கு குறித்த வைத்தியசாலை நிர்வாகம் இன்னும் தயாராகவில்லை. எனவே இந்த பிரதேசத்தில் இடைநிலை சிகிச்சை நிலையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட வேண்டும். அண்மையில் பதுளை மாவட்டத்தில் கனிசமானளவு மரணங்கள் பதிவாகியுள்ளன. எனவே இந்த மாவட்டம் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
தற்போது நாளாந்தம் 700 - 750 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இதற்கமைய நாட்டில் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக எவரேனும் கருதினால் அது தவறாகும்.
18,000 - 19,000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்ட போது 800 - 850 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். ஆனால் தற்போது நாளாந்தம் செய்யப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு 12,000 ஆக குறைவடைந்துள்ளது. எனவே முன்னர் செய்யப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவுடன் ஒப்பிடும் போது 6,000 பி.சி.ஆர். பரிசோனைகள் குறைக்கப்பட்ட நிலையிலேயே சராசரியாக 700 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் போது இலங்கையில் நாளொன்றில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் நூற்றுக்கு 3 சதவீதமானோருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது 6 சதவீதத்தையும் தாண்டியுள்ளது. சில பிரதேசங்களில் நூற்றுக்கு 15 - 20 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
எனவே முழு நாட்டிலும் வைரஸ் பரவல் குறித்து அவதானிக்கும் போது இவ்வருடத்தின் ஆரம்பத்தில் காணப்பட்ட அபாயம் தற்போது இருமடங்காகியுள்ளது. இந்த அபாயம் மும்மடங்காகவும் அதற்கு அடுத்தடுத்த கட்டத்திற்கும் செல்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகளையே நாம் தற்போது முன்னெடுக்க வேண்டும்.
உலக சுகாதார ஸ்தாபனம் நூற்றுக்கு 3 சதவீதத்தையே வரையறையாக குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில் அவதானிக்கும் போது நாடு என்ற ரீதியில் நாம் அபாயத்திற்குள் சென்றுவிட்டோம் என்றார்.
No comments:
Post a Comment