கொலை செய்யப்பட்டார் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கான இத்தாலி தூதுவர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 23, 2021

கொலை செய்யப்பட்டார் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கான இத்தாலி தூதுவர்

கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கான இத்தாலியின் தூதுவரும், இத்தாலிய பொலிஸ் அதிகாரியொருவரும், அவர்களது சாரதியும் கொங்கோவின் கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் உயிரிழந்துள்ளனர்.

தூதுவர் லூகா அட்டனசியோ திங்களன்று கோமா நகரில் இருந்து ருத்ஷூருவில் உள்ள உலக உணவுத் திட்டத்தின் (WFP) கீழ் பாடசாலை உணவுத் திட்டத்தைப் பார்வையிடப் பயணித்தபோது இந்த தாக்குதல் (துப்பாக்கி பிரயோகம்) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனால் தூதுக்குழுவுடன் பயணித்த பல பயணிகள் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொங்கோ நேரப்படி காலை 10:15 மணியளவில் (08:15 GMT) நடந்த இந்த தாக்குதலுக்கு உடனடியாக எவரும் பொறுப்பேற்கவில்லை.

இத்தாலிய வெளியுறவு அமைச்சர் லூய்கி டி மாயோ, இந்த தாக்குதல் தொடர்பாக தனது “மிகுந்த வருத்தத்தையும் மிகுந்த துக்கத்தையும்” வெளிப்படுத்தியதோடு, பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய சகாக்களுடன் தனது சந்திப்பை விட்டுவிட்டு ரோம் நகருக்கு விரைவாக திரும்பினார்.

ருவாண்டா மற்றும் உகாண்டாவுடன் கொங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லையில் அமைந்துள்ள விருங்காவிலும் அதைச் சுற்றியும் பல ஆயுதக் குழுக்கள் செயல்படுகின்றன.

கடந்த வாரம் வடக்கு மற்றும் தெற்கு கிவு மற்றும் இட்டூரி மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களில் 2,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொங்கோ ஜனநாயக குடியரசில் பணியாற்றும்போது கொல்லப்பட்ட இரண்டாவது ஐரோப்பிய தூதுவர் அட்டனசியோ ஆவார்.

1993 ஜனவரி இல், கின்ஷாசாவில் நடந்த கலவரத்தின்போது பிரெஞ்சு தூதுவர் பிலிப் பெர்னார்ட் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment