பிணைமுறி மோசடி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு ஓரிரு வாரங்களில் நிச்சயம் தண்டனை வழங்கப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த - News View

Breaking

Post Top Ad

Saturday, February 6, 2021

பிணைமுறி மோசடி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு ஓரிரு வாரங்களில் நிச்சயம் தண்டனை வழங்கப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த

(எம்.மனோசித்ரா)

மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிர்வரும் ஓரிரு வாரங்களில் நிச்சயம் தண்டனை வழங்கப்படும். அதன் மூலம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், குற்றச் செயல்களில் ஈடுபட்டோருக்கு தண்டனை வழங்கப்படாமையால் நாம் தோல்வியடைந்து விட்டதாகக் கூறுகின்றனர். அவ்வாறு அரசாங்கத்தின் மீது குற்றஞ்சுமத்துபவர்களுக்கு ஒரு விடயத்தை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

கடந்த அரசாங்கத்தில் மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இரு வாரங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையோருக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும். 

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். எதிர்வரும் ஓரிரு வாரங்களில் இது நிச்சயம் நடைபெறும்.

நாம் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியைப் போன்று ஓரிரு தினங்களில் விசாரணைகளை முன்னெடுத்து தண்டனை வழங்குபவர்கள் அல்ல. சட்டம் முறையாக செயற்படுத்தப்படும் வரை பொறுமையாக இருப்போம். 

எனவே நாம் ஏற்கனவே வாக்குறுதியளித்தததைப் போன்று மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கும் ஓரிரு வாரங்களில் நிச்சயம் தண்டனை வழங்குவோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad