இலங்கைக்கு எதிரான பிரேரணை நிச்சயம் தோற்கடிக்கப்படும் - அதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை என்கிறார் அமைச்சர் கெஹெலிய - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

இலங்கைக்கு எதிரான பிரேரணை நிச்சயம் தோற்கடிக்கப்படும் - அதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை என்கிறார் அமைச்சர் கெஹெலிய

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு நிச்சயம் தோற்கடிக்கப்படும். அதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இலங்கை தொடர்பான விவகாரம் கடந்த 2 நாட்களாக ஆராயப்பட்டிருந்தன. 

இதில் இலங்கைக்கு ஆதரவாக சுமார் 21 நாடுகள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன. சில நாடுகள் நடுநிலைப் போக்கை வெளியிட்டிருந்தன. 15 நாடுகள் எதிர்த்திருந்தன. இந்த நிலையில் இது தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைவு நிச்சயம் தோற்கடிக்கப்படும். நட்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன. அதிலும் குறிப்பாக சக்தி மிக்க நாடுகள் பிரேரணையைத் தோற்கடிப்பதில் உறுதியாக உள்ளன.

இலங்கையைப் பழிவாங்கும் வகையில் ஒரு சில நாடுகளின் சதித் திட்டங்களுடன் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெட்டத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

இதனைக் கருத்தில் எடுத்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் பிரேரணையை நிச்சயம் தோற்கடித்தே தீரும் என்றார்.

இதேவேளை, இந்தியா, ஜெனீவாவில் வெளிப்படுத்திய நிலைப்பாடு தொடர்பில் இப்போது கருத்து எதனையும் கூற விரும்பவில்லை என்றும் கெஹலிய குறிப்பிட்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment