வழிகாட்டி தயார் அடுத்தது உரிய இடம், சுற்றறிக்கை வெளியான பின்னரே அடக்க வாய்ப்பு, தகனம் செய்ய விரும்பாவிடின் குளிரூட்டிகளில் வைக்க ஏற்பாடு - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

வழிகாட்டி தயார் அடுத்தது உரிய இடம், சுற்றறிக்கை வெளியான பின்னரே அடக்க வாய்ப்பு, தகனம் செய்ய விரும்பாவிடின் குளிரூட்டிகளில் வைக்க ஏற்பாடு - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

கொரோனா வைரஸ் மரணங்களை அடக்கம் செய்வது தொடர்பிலான இறுதி சுற்றுநிருபம் வெளியிடப்படும் வரை சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அடக்கம் செய்வதற்கான இடங்களை இனங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டு அதனை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயலணியிடம் சமர்ப்பித்து அவர்களது அனுமதி பெற்ற பின்னரே அது சுற்று நிருபமாக வெளியிடப்படும் என்றும் அதற்கிணங்க இறுதி சுற்று நிருபம் வெளியிடப்பட்ட பின்னரே கொரோனா வைரஸ் மரணங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுவரை மரணமடைந்த சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கைகள் தொடரும். சம்பந்தப்பட்டவர்கள் விருப்பப்படும் பட்சத்தில் தகனம் மேற்கொள்ளப்படும். அவ்வாறு தகனம் செய்வதை விரும்பாதவர்கள் அடக்கம் செய்வதற்கான முறைமை தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்படும் வரை குறித்த சடலங்கள் குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

எவ்வாறெனினும் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இடங்களை இனங்காணும் நடவடிக்கைகளுக்கு மேலும் சில தினங்கள் செல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க அனுமதிக்கப்பட்ட சவக்சாலைகள் அல்லது அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் தகுதி வாய்ந்த அதிகாரிகளின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் அடக்கம் செய்வதற்கான சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

நல்லடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டல்கள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தும் சுகாதார அமைச்சின் விசேட குழு நேற்று முன்தினம் கூடி அது தொடர்பில் ஆராய்ந்துள்ளது. 

அதனையடுத்து கொரோனா வைரஸ் மரணங்களை நல்லடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்கள் உள்ளடங்கிய அடிப்படை சட்ட மூலத்திற்கான தயாரிப்பு நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். 

நிபுணர்கள் குழுவின் இரண்டு உறுப்பினர்களும் தாமும் இணைந்து மேற்படி சட்டமூலத்தை தயாரித்துள்ளதாகவும் அடக்கம் செய்யப்படும் முறைமைகள் தொடர்பில் விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா மரணங்களை தகனம் செய்வது அல்லது அடக்கம் செய்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அரசாங்கத்தினால் கடந்த 25ஆம் திகதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment