பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரெழுச்சிப் பேரணியின் இறுதி நாள் இன்று! - News View

Breaking

Post Top Ad

Saturday, February 6, 2021

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரெழுச்சிப் பேரணியின் இறுதி நாள் இன்று!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரெழுச்சிப் பேரணியின் இறுதி நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து இன்று காலை இறுதி இலக்கான பொலிகண்டியை நோக்கி சமய வழிபாடுகளுடன் பேரணி ஆரம்பமாகவுள்ளது.

பேரணி நகருவதற்கு முன்னதாக கிளிநெச்சியில் தொடர்ச்சியாக போராடி வரும் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ள உறவுகளுடன் இணைந்து கண்டனப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

அதன் பின்னர் கிளிநொச்சி நோக்கி நகரும் பேரணியானது நகரின் மையத்தினை அடைந்து அங்கு கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

தொடர்ந்து மீண்டும் ஏ-9 வீதி வழியாக யாழ்ப்பாணத்தினை நோக்கி நகரும் பேரணியானது பளையிலும் கொடிகாமத்திலும் சாவச்சேரியிலும் கைதடியிலும் பின்னர் யாழ். நகரினுள்ளும் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தவுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து பருத்தித்துறை வழியாக நகரவுள்ள பேரணியானது, அச்சுவேலியில் அடைந்ததும் அங்கும் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டதன் பின்னராக நெல்லியடியை சென்றடையவுள்ளது.

நெல்லியடியிலிருந்து பொலிகண்டி நோக்கி பேரணி செல்லவுள்ளது. இதன்போது அனைத்து தரப்பினரும் பங்கேற்று தமது ஆதரவினை தெரிவுக்குமாறு அரசியல் கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரால் பகிரங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லியடியிலிருந்து கால்நடையாகவே பொலிகண்டி நோக்கிய பேரணி இடம்பெறவுள்ளதோடு, பொலிகண்டியை அடைந்ததும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியின் எழுச்சிப் பிரகடனம் செய்யப்படவுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்கல், காணி விடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு, முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு நிரந்தரத் தீர்வை கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளுக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad