"காஷ்மீர் மக்களுக்கு சுதந்திர உரிமையை பாகிஸ்தான் கொடுக்கும்" பிரதமர் இம்ரான் கான் : 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிவேக இணைய சேவை பயன்பாட்டிற்கு வந்தது - News View

About Us

About Us

Breaking

Saturday, February 6, 2021

"காஷ்மீர் மக்களுக்கு சுதந்திர உரிமையை பாகிஸ்தான் கொடுக்கும்" பிரதமர் இம்ரான் கான் : 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிவேக இணைய சேவை பயன்பாட்டிற்கு வந்தது

காஷ்மீர் விவகாரத்தில் பல தசாப்தங்களாக நடத்தப்படாமல் இருக்கும் ஐ.நா சபையின் பொது வாக்கெடுப்பு, நடத்தப்பட்டால் காஷ்மீர் மக்கள் தங்களது விருப்பப்படி, பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாக இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

நேற்று (5) பாகிஸ்தானின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இருக்கும் கோட்லி எனும் இடத்தில் 'காஷ்மீர் ஒற்றுமை நாள் கூட்டம்' நடைபெற்றது.

1991ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "நீங்கள் காஷ்மீரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்தால், பாகிஸ்தானோடு இணைந்து இருக்கலாம் அல்லது விரும்பினால் தனியாக சுதந்திர நாடாக இருக்கும் உரிமையை பாகிஸ்தான் வழங்கும்" எனக் கூறினார்.

"காஷ்மீர் மக்களுக்கும், பாகிஸ்தானுக்கும் வழங்கிய உத்தரவாதத்தை ஐ.நா சபைக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால், இதேபோன்று இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கிய உத்தரவாதத்தை ஐ.நா நிறைவேற்றியுள்ளது."

"சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவாக பாகிஸ்தான் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இஸ்லாமிய உலகமும் நிற்கிறது. காஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை என்னால் உணர முடிகிறது. நீங்கள் விரும்பியதை பெறும் வரை, நான் செல்லும் இடங்களில் எல்லாம் உங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் தொடர் பதிவுகளை இட்டுள்ள அவர், "காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை என்னும் குறிக்கோள் வெகு தொலைவில் இல்லை என்று நான் கூற விரும்புகிறேன். உங்கள் நியாயமான உரிமைகளை நீங்கள் அடையும் வரை பாகிஸ்தான் உங்களுடன் துணை நிற்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"காஷ்மீர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக் கோருவதில் இந்தியா நேர்மையை வெளிப்படுத்தினால், ஐ.நா சபையின் தீர்மானங்களின்படி, அமைதிக்காக இரண்டு படிகளை முன்னெடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், அமைதிக்கான எங்கள் விருப்பத்தை யாரும் பலவீனம் என்று தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். மாறாக, ஒரு வலிமை மிக்க நாடாக நாங்கள் காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அமைதியான முறையில் நிறைவேற்றவே நாங்கள் விரும்புகிறோம்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சனை
1947ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மூன்று முறை போர் மூண்டிருக்கிறது. அதில் இரு முறை காஷ்மீருக்காகப் போர் நடந்தது. இரு நாடுகளுமே காஷ்மீரை முழுமையாக உரிமை கோருகிறார்கள். எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி (லைன் ஆஃப் கன்ட்ரோல்) என்றழைக்கப்படும் எல்லைப் பகுதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே இரு நாடுகளும் நிர்வகித்து வருகின்றன.

கடந்த 1948ஆம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்புச் சபை, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணையவதை முடிவு செய்ய பொதுமக்கள் வாக்கெடுப்பை நடத்துமாறு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் காஷ்மீர் தனி நாடாக இருக்கலாம் என்கிற வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

எனினும், காஷ்மீரில் (பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் உட்பட) இருந்து பாகிஸ்தான் தன் துருப்புகளைப் பின்வாங்கும் வரை, இந்த பொது வாக்கெடுப்பை நடத்த முடியாது என இந்தியா மறுப்புத் தெரிவித்து வந்தது.

18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிவேக இணைய சேவை
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் 4G இணைய சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக வெள்ளிக்கிழமை மாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு பிறகு அதிவேக இணைய சேவை அங்கு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் முழுவதும் 4ஜி இணைய சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இது செயல்பாட்டிற்கு வரலாம் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை இந்திய அரசு அங்கு மொபைல் இணைய சேவை உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு வசதிகளையும் முடக்கியிருந்தது.

பிறகு 2020 ஆகஸ்ட் மாதத்தில் இரண்டே மாவட்டங்களுக்கு மட்டும் அதிவேக இணைய வசதி அளிக்கப்பட்டது. சோதனை அடிப்படையில், காஷ்மீர் பிராந்தியத்தில் கண்டெர்பால் மாவட்டம் மற்றும் ஜம்மு பிராந்தியத்தின் உதம்பூர் மாவட்டத்தில் மட்டும் இணைய வசதி வழங்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் திகதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, அவை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்களும், செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment