இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை பிரதமர் மஹிந்தவே சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றார் - ஜெனிவா விவகாரத்தை நாட்டை முன்னிலைப்படுத்தி பொதுத்தன்மையுடன் செயற்படுவது அவசியம் : ரணில் விக்கிரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை பிரதமர் மஹிந்தவே சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றார் - ஜெனிவா விவகாரத்தை நாட்டை முன்னிலைப்படுத்தி பொதுத்தன்மையுடன் செயற்படுவது அவசியம் : ரணில் விக்கிரமசிங்க

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றார். நல்லாட்சி அரசாங்கம் அதனை செய்யவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த அரசாங்கமே பல சாதகமான தீர்மானங்களை முன்னெடுத்தது. சிவில் ஆட்சிக்கு முரணாக செயற்படும் போது சர்வதேசம் எழுப்பும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கை குறித்து பல்வேறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்து தீர்வை பெறவோ, இணக்கமாக செயற்படவோ முடியாது. நாட்டை முன்னிலைப்படுத்தி பொதுத்தன்மையுடன் செயற்படுவது அவசியமாகும்.

நாட்டின் உள்ளக விவகாரத்தை நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றதாகக் கூறுவது முற்றிலும் தவறானமாகும்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பிறகு முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் அப்போதைய பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே இலங்கையின் உள்ளக விவகாரங்கள் சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.

2015 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அமைப்புக்களிடமிருந்து அரசாங்கம் சாதகமான தீர்மானங்களை பெற்றுக்கொண்டது. நாடு என்ற ரீதியில் ஒருபோதும் தனித்து செயற்பட முடியாது.

ஒரு நாட்டில் சிவில் ஆட்சி முறை இடம்பெறுகிறதா அல்லது இராணுவ ஆட்சி முறைமை இடம் பெறுகிறதா என்பதை ஐக்கிய நாடுகள் சபை உன்னிப்பாக அவதானிக்கும்.

நிர்வாக கட்டமைப்பினை கொண்டு சர்வதேச அரங்கில் அங்கீகாரம் கிடைக்கப் பெறும். இலங்கையை சிவில் கட்டமைப்பிலான நிர்வாக முறைமையை கொண்ட நாடு என ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது. இந்நிலைமைக்கு புறம்பாக செயற்படும் போது சர்வதேசம் கேள்வி எழுப்பும் அதற்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

உள்ளக மற்றும் சர்வதேச மட்டத்தில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் அரசியலமைப்பு பேரவை ஒரு சில காரணிகளை கொண்டு நீக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரது ஆலோசனைக்கு அமையவே எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். ஆகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை விவகாரத்தை அரசாங்கம் பொறுப்புடன் கையாள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment