ஜனாதிபதி கோத்தாபய மக்களின் நகைப்பிற்கு உள்ளாகி வருகிறார் - ஆணைக்குழு என்றாலே நகைக்கும் நிலை உருவாகியுள்ளது : தேசிய பிக்குகள் முன்னணி - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 2, 2021

ஜனாதிபதி கோத்தாபய மக்களின் நகைப்பிற்கு உள்ளாகி வருகிறார் - ஆணைக்குழு என்றாலே நகைக்கும் நிலை உருவாகியுள்ளது : தேசிய பிக்குகள் முன்னணி

(நா.தனுஜா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அண்மைக் காலமாக மக்களின் நகைப்பிற்கு உள்ளாகி வருகிறார். உண்மையில் நாட்டின் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கு அவர் தகுதி வாய்ந்தவரல்ல. மாறாக இராணுவ நடவடிக்கைகளுக்கும் இராணுவத்தினருக்குக்கு கட்டளையிடுவதற்குமே பொருத்தமானவர் என்று தேசிய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் வக்கமுல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார்.

தேசிய பிக்குகள் முன்னணியால் கொழும்பில் செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து 2019 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கென ஜனாதிபதியினால் விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு பல்வேறு தரப்பினரையும் அழைத்து, அவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்று, விசாரணைகளை முன்னெடுத்தது. பின்னர் அது குறித்த அறிக்கையினை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. 

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கும் ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்தார். அதன் இறுதி அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டு சில நாட்களுக்குள்ளாகவே, ஜனாதிபதி மேலுமொரு அதிவிசேட ஆணைக்குழுவை நியமித்தார்.

இவ்வாறான ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் ஊடாக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. உண்மைகளைக் கண்டறிவதற்கும், சில வேளைகளில் உண்மைகளை மறைப்பதற்கும் இத்தகைய ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படுகின்றமை வழக்கமாகும்.

ஆணைக்குழுவை நியமிக்கின்ற ஜனாதிபதிகளின் செயற்பாடுகளின் விளைவாக, ஆணைக்குழு என்றாலே மக்கள் நகைக்கும் நிலையொன்று உருவாகியிருக்கிறது.

அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவும் மக்களின் நகைப்பிற்குரியதொன்றாகவே மாறியிருக்கின்றது.

ஏனெனில் நாட்டின் நிர்வாகம் என்பது நிறைவேற்றதிகாரம், அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றையும் மையப்படுத்தியதாகவே அமைந்திருக்கிறது.

இதற்கிடையில் விசேட ஆணைக்குழுக்களை அமைக்கும் போது நீதிமன்றத்தின் அதிகாரங்கள் அந்த ஆணைக்குழுவிடம் சென்று சேர்கின்றன. எனவே தாம் விரும்புவது போன்று அனைத்து விடயங்களுக்கும் ஆணைக்குழுக்களை நியமிக்க முடியாது.

எமது நாட்டைப் பொறுத்த வரையில் நாம் இப்போதும் நீதித்துறையின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். ஒரு சம்பவத்தில் தொடர்புபட்டிருக்கும் இரு தரப்பினரும் தமது தரப்பு நியாயங்களை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பு நீதிமன்றக் கட்டமைப்பில் காணப்படுகின்றது.

எனினும் விசாரணை ஆணைக்குழுக்களில் அத்தகைய வாய்ப்பு இல்லை. உதாரணமாகக் கூறுவதாயின், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்தது. ஆணைக்குழுவில் ஆஜரான அவர், அங்கு பேசும் மொழி தனக்குப் புரியவில்லை என்றும் தனது மொழியில் பேசுவதற்கும் ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்கும் வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

எனினும் அதன் பின்னர் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் அண்மையில் தண்டனை வழங்கப்பட வேண்டிய நபர்களின் பெயர்களை உள்ளடக்கி அண்மையில் ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்தில் சுமந்திரனின் பெயரும் காணப்படுகின்றது. எமக்கு நகைப்பை ஏற்படுத்தக் கூடிய உதாரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஆகவே இந்த ஆணைக்குழுக்களின் ஊடாகக் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் தமது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. ஆணைக்குழுவின் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக மாத்திரமே ஒவ்வொரு நபர்களும் அங்கு அழைக்கப்படுகின்றார்கள்.

எனவே இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வேடிக்கையானவையாக மாறியிருக்கின்றன. ஜனாதிபதியும் அண்மைக் காலத்தில் மக்களின் நகைப்பிற்கு உள்ளாகி வருகிறார்.

உண்மையில் நாட்டின் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கு அவர் தகுதி வாய்ந்தவரல்ல. அவர் இராணுவ நடவடிக்கைகளுக்கும் இராணுவத்தினருக்கும் கட்டளையிடுவதற்குமே பொருத்தமானவர்.

ஆனால் போரிலும் அவர் தேர்ச்சியடையவில்லை என்றே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகின்றார். எனவே அவர் நாட்டின் நிர்வாகத்தைப் பொறுத்த வரையில் தோல்வியடைந்திருக்கிறார் என்றே கூற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment