தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வுக்காக மாத்திரமன்றி அவர்களின் ஏனைய அடிப்படை உரிமைகளுக்காகவும் அதேபோன்று, எமது ஒட்டு மொத்த சமூகத்தின் உரிமைகளுக்காகவும் நேர்மையுடன் செயற்படும் அனைத்து சக்திகளுக்கும் நாம் நிச்சயம் ஆதரவு நல்குவோம் என அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “இன்று எமது தொழிலாளர்கள் மட்டுமன்றி ஒட்டு மொத்த சமூகமுமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. முன் எப்போதுமே இல்லாத வகையில் இளைய தலைமுறையினர் தொழிலாளர்களினதும் எம் சமூகத்தினதும் வளர்ச்சிக்கான செயற்பாடுகளில் தங்களை உணர்வுபூர்வமாக இணைத்துக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் எம் ஒவ்வொரு அமைப்புகளின் செயற்பாடுகளையும் இளைய தலைமுறையினர் நுணுக்கமாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த விதமான நேர்மையற்ற செயற்பாடுகளையும் விமர்சித்து தோற்கடிக்கும் சக்தி எம் இளைய தலைமுறையினரிடம் வளர்ந்து வருகிறது.
ஆகவே தொழிலாளர்களின் பிரச்சினை சம்பள உயர்வு மட்டுமே என்று எல்லையிட்டு நாம் செயற்பட முடியாது செயற்படவும் கூடாது.
சம்பள உயர்வுக்கான ஹட்டன் மல்லிகைப்பூ சந்தி போராட்டத்தில் மலையகத்தின் முழு அமைப்புகளும் மாத்திரமன்றி தேசிய மட்டத்திலும் எல்லா முனைகளிலிருந்தும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டும் கூட எதிர்ப்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கவில்லை “இது மக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி மாத்திரமே” என்று என் தந்தை இதற்கு ஒரு வரி விளக்கம் தந்தார்.
அதே போன்று கடந்த அரசாங்கத்திலும் இன்றைய அரசாங்கத்திலும் நாட்டு தலைவர்களால் உறுதியளித்தும் கூட சம்பள பிரச்சினை நியாயமான தீர்வை எட்டவில்லையென்றால் இது சம்பந்தமான அவிழ்க்க முடியாத முடிச்சும் முட்டுக்கட்டையும் வேறு எங்கோ இருக்கிறது என்பதுதான் உண்மை.
நோயின் உண்மை தன்மையை கண்டறியாத சிகிச்சை பயன்தராது என்பது போல சம்பள பிரச்சினையின் உண்மையான முட்டுக்கட்டையைக் கண்டறிந்து தீர்க்காதவரை இது தொடர்கதையாகவே அமையும்.
சம்பள உயர்வுக்கான போராட்டத்துக்கு மாத்திரமன்றி தொழிலாளர்களின் நலன் சார்ந்த அனைத்து போராட்டங்களுக்கும் வேலைத்திட்டங்களுக்கும் என் தந்தை நிபந்தனைகளின்றி ஆதரவு வழங்கினார்.
கட்சி என்ற நிலைப்பாட்டிற்கும் அமைச்சர் என்ற பொறுப்புக்கும் அப்பால் என் தந்தை தொழிலாளர் நலனுக்கே முதலிடம் வழங்கி செயற்பட்டார். இதே நிலைப்பாட்டில்தான் நானும் நான் சார்ந்த அமைப்பும் தொடர்ந்தும் பயணிப்போம்.
ஆகவே சம்பள உயர்வு போராட்டத்துக்கு மட்டுமல்லாது எதிர்காலங்களில் தொழிலாளர்கள் சார்ந்த எம் சமூகம் சார்ந்த அனைத்து நேர்மையான செயற்பாட்டிற்கும் எமது ஆதரவு நிச்சயம் உண்டு.
இன்று பிரச்சினையாகியுள்ள சம்பள உயர்வு விடயத்தினை விடவும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு நாம் எதிர்காலத்தில் முகம் கொடுக்க நேரிடலாம்.
எமது எந்த பிரச்சினைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்துடன் முற்றுப்பெறுவதில்லை இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு எமது நேர்மையான செயற்பாடுகளினால் அனைத்து சக்திகளையும் இணைத்துக் கொண்டு எம் சமூக உரிமையை வென்றெடுப்பதில் நான் உறுதியோடு செயற்படுவேன்.“ எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment