(இராஜதுரை ஹஷான்)
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கி அரசாங்கம் கிழக்கு முனையத்தை பாதுகாத்துக் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடுகின்றன. கிழக்கு முனையத்தை ஏனைய முனையங்களுடன் ஒப்பிட முடியாது. ஏனைய முனையங்களை காட்டிலும் கிழக்கு முனையமே பிரதானமானது. மேற்கு முனையம் பிற நாட்டு தனியார் நிறுவனத்துடன் கூட்டணினைந்து அபிவிருத்தி செய்யப்படும். சுபீட்சமான கொள்கை திட்டத்துக்கு அமையவே அரசாங்கம் செயற்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கைத்தொழில் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்திவ் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்னெடுத்த பிரசாரங்கள் அனைத்தும் நேற்று முன்தினத்துடன் முழுமைப் பெற்றுள்ளது.
கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகளை இந்திய நிறுவனத்துக்கு வழங்குதல் தொடர்பில் ஒரு யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டது.
கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கு துறைமுக தொழிற்சங்கத்தினர், ஆளும் தரப்பினர், அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர முன்னின்று செயற்பட்ட பௌத்த மத தலைவர்கள் அனைவரும் ஒன்றினைந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். அனைத்து தரப்பினரது கோரிக்கைக்கும் மதிப்பளித்து அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
துறைமுக அதிகார சபையினால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இன்னும் மூன்று வருட காலத்துக்குள் அபிவிருத்தி செய்ய முடியும் என்று உறுதிப்படுத்தப்பட்டதால் கிழக்கு முனையத்தின் 100 சதவீத உரிமம் துறைமுக அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் தற்போது எதிர்தரப்பினர் மேற்கு முனையத்தை வழங்கி அரசாங்கம் கிழக்கு முனையத்தை பாதுகாத்துக்கு கொண்டது என குறிப்பிடுகிறார்கள்.
கிழக்கு முனையத்தை ஏனைய முனையங்களுடன் ஒப்பிட முடியாது. கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனையமே பிரதானமாகும். சுபீட்சமான கொள்கை திட்ட விஞ்ஞாபனத்தில் 58 ஆம் பக்கத்தில் கொழும்பு துறைமுகம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் முனையத்தை பிற நாட்டு தனியார் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் அபிவிருத்தி செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அரசாங்கம் செயற்படும்.
தேசிய வளங்களை எந்நிலையிலும் அந்நிய நாட்டவர்களுக்கு வழங்குவதில்லை என ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டுள்ளது.
ஆளும் தரப்பின் பிரதான 10 கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டவர்களின் அரசியல் சூழ்ச்சி அனைத்தும் தற்போது பொய்யாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் என்றும் இணக்கமாகவே செயற்படுவோம் என்றார்.
No comments:
Post a Comment