கிழக்கு மாகாண ஆளுநரால் பிரதேச சபை தவிசாளர்கள் இருவரின் பதவி இடைநிறுத்தம் - தடை கோரி முன்வைக்கப்பட்ட மனு நிராகரிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

கிழக்கு மாகாண ஆளுநரால் பிரதேச சபை தவிசாளர்கள் இருவரின் பதவி இடைநிறுத்தம் - தடை கோரி முன்வைக்கப்பட்ட மனு நிராகரிப்பு

திருகோணமலை - தம்பலகாமம் மற்றும் அம்பாறை - இறக்காமம் ஆகிய பிரதேச சபை தவிசாளர்களின் பதவியை இடைநிறுத்தி கிழக்கு மாகாண ஆளுநரால் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பிற்கு தடை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை திருகோணமலை மேல் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த கோரிக்கை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மனு நிராகரிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர்களின் தீர்மானத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது என அறிவித்த நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளார்.

இரண்டு பிரதேச சபைகளின் தவிசாளர்களும் தொடர்ந்தும் செயற்படுவதற்குரிய அனுமதியை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்து இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய, புதிய தவிசாளர் தெரிவிற்கு கிழக்கு மாகாண ஆளுநரால் திகதி குறிக்கப்பட்டுள்ள நாளிலேயே தேர்தலை நடத்துவதற்கும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அனுமதி வழங்கியுள்ளார்.

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவிற்குரிய தேர்தல் நாளை (10) நடத்தப்படவுள்ளது.

இறக்கமாமம் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவிற்கான தேர்தல் எதிர்வரும் 12 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர்களின் தீர்மானம் சட்ட விரோதமானது என அறிவித்து , தொடர்ந்தும் பழைய தவிசாளர்களை பதவி வகிக்க அனுமதிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் இரண்டு சபைகளினாலும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டிலேயே ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர்களால் புதிய தவிசாளர் தெரிவிற்கு திகதியிடப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

நீண்ட நேர விவாதத்தின் பின்னர் கிழக்கு மாகாண ஆளுநரின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுதாரர்களின் மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad