தமிழ், முஸ்லிம் சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறையை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் - ஐ.நா. முன்னாள் அதிகாரிகள், மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்து - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

தமிழ், முஸ்லிம் சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறையை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் - ஐ.நா. முன்னாள் அதிகாரிகள், மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்து

(நா.தனுஜா)

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறை கொள்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை முடிவிற்கு கொண்டு வந்து நீதி மற்றும் பொறுப்புக் கூறலை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் விசேட நிபுணர்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நீதி மற்றும் பொறுப்புக் கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் இலங்கையின் மந்தகரமான செயற்பாடுகள் தொடர்பில் அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கை குறிப்பாக சில முக்கிய விடயங்கள் தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தியிருக்கிறது.

போர்க்குற்றங்களை புரிந்ததாக ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெயரிடப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்படல் உள்ளடங்கலாக சிவில் அரச நிர்வாகத்தில் அதிகரித்து வரும் இராணுவமயமாக்கம், சுயாதீன நீதித்துறையில் தலையீடுகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு உள்ளடங்கலாக அரசியலமைப்பின் ஊடாக உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கள் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளமை, மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான விசாரணைகளில் புதிய அரசியல் தலையீடுகள் ஏற்படல், சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அநாவசியமான கண்காணிப்புக்கள் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவங்கள் மீள நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதே ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் நோக்கமாக இருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். கடந்த 2009 ஆம் ஆண்டில் இலங்கை தொடர்பில் செயலாற்றுவதற்கு சர்வதேச சமூகம் தவறிவிட்டது.

எனினும் நாம் மீண்டும் தோற்கக்கூடாது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான நீதியையும் பொறுப்புக் கூறலையும் உறுதி செய்யும் நோக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் 30 1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதென்பது சற்று மந்தகரமான முறையில் இடம்பெற்றாலும் குறிப்பாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவை ஸ்தாபிக்கப்பட்டன.

எனினும் உண்மைக்கான அலுவலகம் மற்றும் சர்வதேச குற்றங்களை விசாரணை செய்வதற்கான நீதிமன்றம் என்பன ஸ்தாபிக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தாலும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

எனினும் பொறுப்புக்கூற வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் குற்றங்கள் எதனையும் இலங்கை மேற்கொள்ளவில்லை என்று கூறி, ஏற்கனவே உடன்பட்ட கடப்பாடுகளைத் தற்போதைய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அதுமாத்திரமன்றி மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஏற்கனவே இடம்பெற்று வரும் விசாரணைகள் பூர்த்தியடைவதற்கு முன்னரே, கடந்த கால விசாரணை அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்கென ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்நிலையில் குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறை கொள்கைகளை நிறுத்துமாறு ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளமையை நாம் மீள நினைவுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதியும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவருமான ஜுவான் மனுவேல் சான்ரோஸ், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பிரதி பொதுச் செயலாளர் ஜான் எலியசன், அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மேரி ரொபின்சன், முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல்-ஹுசைன் உள்ளிட்ட 18 பேர் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment