பெளத்தர்களின் புனித தலங்களை இணைக்கும் ‘பெளத்த பாதை‘ ஒன்றை வடிவமைத்து வருகிறோம் - சீன, பாகிஸ்தான் பொருளாதார நடைபாதை வேலைத்திட்டமானது மத்திய ஆசியாவுக்கும் இலங்கைக்கும் முக்கியமானது - இம்ரான் கான் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

பெளத்தர்களின் புனித தலங்களை இணைக்கும் ‘பெளத்த பாதை‘ ஒன்றை வடிவமைத்து வருகிறோம் - சீன, பாகிஸ்தான் பொருளாதார நடைபாதை வேலைத்திட்டமானது மத்திய ஆசியாவுக்கும் இலங்கைக்கும் முக்கியமானது - இம்ரான் கான்

(ஆர்.யசி)

பெளத்தர்களின் புனித தலங்களை இணைக்கும் ‘பெளத்த பாதை‘ ஒன்றை வடிவமைத்து வருகிறோம். இதன் மூலம் பெளத்த மதத்தை பின்பற்றுகின்ற மக்கள் எமது நாட்டுக்கு வருகை தர முடியும். இதற்கான முதல் அழைப்பை நான் இலங்கைப் பிரதமருக்கு விடுக்கிறேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அதன் பின்னர் இணை ஊடக சந்திப்பொன்றை நடத்திய நிலையில் அதில் உரையாற்றும் போதே பிரதமர் இம்ரான் கான் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், முதலில் என்னையும் எனது தூதுக்குழுவினரையும் இலங்கைக்கு வரவேற்று உபசரித்தமைக்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இலங்கைக்கு புதியவனல்ல.

நான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியவுடனேயே ஒரு கிரிக்கட் வீரனாக இலங்கைக்கு வந்தேன். நான் எனது கிரிக்கட் வாழ்க்கையை ஆரம்பித்திருந்த போது இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்திருந்தார்.

அன்றிலிருந்து இலங்கை தொடர்பான சிறந்த நினைவுகளை நான் கொண்டிருக்கிறேன். டெஸ்ட் அந்தஸ்தற்ற நிலையிலிருந்து உலகக் கிண்ணத்தை வென்றது வரை இலங்கை கிரிக்கட் அணி வளர்ச்சியடைந்து வந்ததை நாம் பார்த்திருக்கிறோம்.

உலகக் கிண்ணத்தைக் கூட இலங்கை அணி பாகிஸ்தானில் வைத்தே வென்றது. நானும் எனது கிரிக்கட் அணியினரும் இலங்கை கிரிக்கட் அணியின் பரிணாம வளர்ச்சியை கண்டிருக்கிறோம்.

எமது துணைக்கண்டத்தைச் சேர்ந்த நாடு என்ற வகையில் இலங்கை அணி ஓர் உலகத்தரம் வாய்ந்த அணியாக வளர்ச்சியடைந்ததைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைந்தோம்.

இந்த விஜயம் வரைக்குமான இலங்கையுடனான எனது உறவை நினைவூட்டவே இந்த விடயங்களை இங்கு குறிப்பிடுகிறேன். இந்த விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். எமது வியாபார உறவை வலுப்படுத்துவதை இலக்காக கொண்டது.

பாகிஸ்தான் சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் ஓர் அங்கமாக உள்ளது. சீன - பாகிஸ்தான் பொருளாதார நடைபாதை வேலைத்திட்டமும் முதன்மையானதாகும்.

நாடுகளுக்கிடையிலான தொடர்புகள் மிக முக்கியமானதாகும். எனவேதான் நான் எனது தூதுக்குழுவிடம் இலங்கைக்கு பாகிஸ்தானுக்குமிடையிலான தொடர்புகளை மேலும் முன்னேற்றுவதற்கான வழிவகைகளைக் கண்டறியுமாறு கேட்டிருக்கிறேன்.

சீன - பாகிஸ்தான் பொருளாதார நடைபாதை வேலைத்திட்டமானது மத்திய ஆசியாவுக்கும் இலங்கைக்கும் முக்கியமானதாகும்.

எமது வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிவகை குறித்தும் நாம் பேசியிருக்கிறோம். எதிர்காலத்தில் மத்திய ஆசியாவுடனான பாகிஸ்தானின் தொடர்பு மூலம் மேலும் இலங்கை எவ்வாறு பயனடையலாம் என்பது பற்றி நாம் ஆராய்ந்திருக்கிறோம். எமது வர்த்தக உறவுகள் மூலம் இரு நாடுகளும் மேலும் ஒன்றுபட முடியும். மேலும் நெருக்கமடைய முடியும்.

எமது இரு நாடுகளும் பங்கரவாதம் எனும் பொதுவான பிரச்சினைக்கு முகங்கொடுத்த நாடுகள். மிக மோசமான பயங்கரவாதத்திற்கு 10 ஆண்டுகளாக பாகிஸ்தான் முகங்கொடுத்தது. இதனால் 70 ஆயிரம் உயிர்களை நாம் இழந்தோம். 

அதேபோன்று இலங்கையும் 30 வருட காலம் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடியது. இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதை இந்த இடத்தில் நினைவுபடுத்துகிறேன்.

சுற்றுலாத் துறையின் மீது தங்கியுள்ள இலங்கையின் அபிவிருத்தி இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. பயங்கரவாதம் உள்ள ஒரு நாட்டினால் முன்னேற்றமடைய முடியாது. பயங்கரவாதம் உள்ள ஒரு நாட்டில் முதலீடுகளைச் செய்ய முடியாது. பாகிஸ்தானில் பயங்கரவாதம் தலைவிரித்தாடிய 10 ஆண்டுகளில் சுற்றுலாத் துறையே இருக்கவில்லை. எந்தவிதமான முதலீடுகளும் பாகிஸ்தானுக்கு கிடைக்கவில்லை.

இப்போது நாம் இன்னுமொரு பொதுவான பிரச்சினைக்கு முகங்கொடுக்கிறோம். அதுதான் கொரோனா வைரஸ். சுற்றுலாத் துறையில் தங்கியுள்ள இலங்கை போன்ற சகல நாடுகளும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டதை நாம் அறிவோம்.

இந்த நெருக்கடியான காலத்தில் அபிவிருத்தியடைந்த நாடுகள், எவ்வாறு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவலாம் என்பது பற்றி நாம் கலந்துரையாடினோம்.

கொரோனா வைரஸ் நெருக்கடி வறிய நாடுகளையும் அவற்றில் வாழுகின்ற வறிய மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதை அபிவிருத்தியடைந்த நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். வறுமையான நாடுகள் எவ்வாறு கடன் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றியும் நாம் கலந்துரையாடினோம்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாகிஸ்தான் தனது வரலாற்றிலேயே 8 பில்லியன் டொலர் பெறுமதியான மிகப் பெரிய நிவாரண உதவித்திட்டத்தை அமுல்படுத்தியது.

இதனை நீங்கள் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது அங்கு 3000 பில்லியன் டொலர் நிவாரணமாக வழங்கப்பட்டது. அமெரிக்காவின் சனத் தொகை 330 மில்லியன். பாகிஸ்தானின் சனத் தொகை 220 மில்லியன். இது அமெரிக்க சனத் தொகையில் 70 வீதம். இதுதான் மிகப் பெரிய முரண்பாடு.

கொரோனா வைரஸ் உலகில் நிலவும் இந்த சமத்துவமின்மையை நன்கு வெளிக்காட்டியுள்ளது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக நிறுவனங்கள் கொரோனா வைரஸினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இவ்வாறான நாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன்.

இறுதியாக, நான் இலங்கைப் பிரதமரை பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கிறேன். உலகிலேயே மிகப் பாரிய பெளத்த புராதன சின்னங்களை பாகிஸ்தான் கொண்டுள்ளது.

40 அடி நீளமான ‘உறங்கும் புத்தர்’ எனும் உலகிலேயே மிகப் பாரிய பெளத்த புராதன சின்னத்தை நாம் அண்மையில் கண்டுபிடித்துள்ளோம். வடக்கு பாகிஸ்தான், கந்தாரா நாகரீகத்தின் மிக முக்கிய தளமாகும். இவற்றை பார்வையிட பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு இலங்கை மக்களை நான் அழைக்கிறேன். 

நாம் இப்போது பெளத்தர்களின் புனித தலங்களை இணைக்கும் ‘பெளத்த பாதை‘ ஒன்றை வடிவமைத்து வருகிறோம். இதன் மூலம் பெளத்த மதத்தை பின்பற்றுகின்ற மக்கள் எமது நாட்டுக்கு வருகை தர முடியும். இதற்கான முதல் அழைப்பை நான் இலங்கைப் பிரதமருக்கு விடுக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad