பல சவால்களுக்கு மத்தியில் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை தீர்க்கமான நேரத்தில் தைரியமாக தீர்மானம் எடுக்கும் மனோபாவத்தையும், அரச தலைவருக்கான ஆளுமை பண்பையும் வெளிப்படுத்தியுள்ளது - இம்ரான் கானுக்கு மஹிந்த புகழாரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 23, 2021

பல சவால்களுக்கு மத்தியில் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை தீர்க்கமான நேரத்தில் தைரியமாக தீர்மானம் எடுக்கும் மனோபாவத்தையும், அரச தலைவருக்கான ஆளுமை பண்பையும் வெளிப்படுத்தியுள்ளது - இம்ரான் கானுக்கு மஹிந்த புகழாரம்

(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கும், பாக்கிஸ்தானுக்கும் கலாச்சார மற்றும் மத அடிப்படையில் வரலாற்று ரீதியில் நல்லுறவு காணப்படுகிறது. இந்த இரு தரப்பு நல்லுறவை சிறந்த முறையில் தொடர்ந்து பேணுவது அவசியமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் வலியுறுத்தினார்.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் நாட்டு பிரதமருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான உத்தியோகப்பூர்வ இரு தரப்பு சந்திப்பு இன்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பின்வருமாறு குறிப்பிட்டார்.

பிரதமர் இம்ரான் கான் அவர்களே, உங்களையும், உங்களின் உயர்மட்ட குழுவினரையும் அன்புடன் வரவேற்கிறேன். 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கு பின்னர் நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டுக்கு வரும் முதல் அரச தலைவராக நீங்கள் கருதப்படுகின்றீர்கள்.

எனது அழைப்பினை ஏற்று கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் சவாலுக்கு மத்தியில் நீங்கள் இலங்கைக்கு நட்புடன் வருகை தந்துள்ளீர்கள். நீங்களும், உங்கள் நாட்டு மக்களும் இலங்கை மீது கொண்டுள்ள பற்றினை தற்போதைய விஜயம் உறுதிப்படுத்தியுள்ளது.

பல சவால்களுக்கு மத்தியில் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை தீர்க்கமான நேரத்தில் தைரியமாக தீர்மானம் எடுக்கும் மனோபாவத்தையும், அரச தலைவருக்கான ஆளுமை பண்பையும் வெளிப்படுத்தியுள்ளது.

20 வருடத்திற்கு முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தங்களின் தலைமைத்துவம் எத்தன்மையில் காணப்பட்டது. என்பதை அறிய முடிகிறது.

பல வருட காலமாக செயற்பாட்டு அரசியலில் ஈடுப்பட்டதால் மக்கள் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்துள்ளார்கள். அடிமட்ட மக்களுக்காக அரச நிர்வாகத்தை முன்னெடுப்பது உங்களின் கொள்கையாகவும் எங்களின் அரசாங்கத்தின் கொள்கையாகவும் காணப்படுகிறது.

இடம்பெறவுள்ள தேர்தலில் நீங்களும், உங்கள் அரசாங்கமும் வெற்றி பெற இலங்கை சார்பில் முற்கூட்டிய வாழ்த்துக்கள். இரண்டு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவை தொடர்ந்து சிறந்த முறையில் பேணுவது அவசியமாகும்.

வர்த்தக முதலீட்டாளர்களுடன் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். பொருளாதார முன்னேற்றத்தில் அரச மற்றும் தனியார் முதலீடுகள் அவசியமானதாகும்.

2017 ஆம் ஆண்டும், ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட விஜயம் இலங்கைக்கு சாதகமான தன்மையில் இருந்தது. இரண்டு முறை மேற்கொண்ட விஜயத்தை மறக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இன்றைய இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டோம்.

பாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் வழங்கப்பட்ட வாய்ப்புகளைத் தொடர நாங்கள் இணங்கியுள்ளோம். எமது கலந்துரையாடலின் போது கொவிட் தொற்று நோய் உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா மற்றும் விமான சேவை துறைகளின் செயற்பாட்டை அதிகரிக்கவும் நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம்.

பாகிஸ்தானின் புரதான பௌத்த பாரம்பரியத்தை இலங்கையர்கள் பார்வையிடுவதை சாத்தியமாக்கிய பாகிஸ்தான் அரசுக்கு நாங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல் பாகிஸ்தான்-இலங்கை பாராளுமன்ற நட்புரவுக் குழு மூலம் பாராளுமன்ற தொடர்புகளை மீண்டும் ஆரம்பிக்க நாம் முன்னெடுத்த மற்றுமொரு முக்கியமான தீர்மானமாகும்.

தெற்காசியாவின் நிலையான அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பை அடைவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் பிராந்திய அமைதியும் முக்கியமாகும் என இலங்கை நம்புகின்றது.

எமது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய அங்கமான வறுமை மற்றும் சமூக பொருளாதார சமத்துவமின்மையைப் போக்குவதற்கு பிரதமர் இம்ரான் கான் முன்னெடுக்கும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.

பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் தொடர்ச்சியான ஒன்றிணைந்து செயற்படுவோம். 

சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகம், ஆயுதக் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க உரிய முகவர் நிறுவனங்கள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு தற்போதைய பொறிமுறைகளுடன் முன்னோக்கி செல்வதற்கு எமது கலந்துரையாடல்களில் ஈடுபடுவோம்.

விளையாட்டுத் துறைக்கான ஒத்துழைப்பு மற்றும் நாட்டின் விளையாட்டு பயிற்சி வசதிகளை மேம்படுத்துவதற்கு ஆதரவளித்தமைக்கு பாகிஸ்தானுக்கு நன்றி கூறுகின்றோம். 

பாகிஸ்தானின் ஒரு உயர்மட்ட பல்துறை வணிகக் குழுவுடன் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் நாளைய தினம் ஒரு வணிக மற்றும் முதலீட்டு மாநாட்டிற்கு தலைமைதாங்கவுள்ளார்.

இலங்கையுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படும் இந்த நேரடி வர்த்தக உறவினூடாக இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment