முஸ்லிம்கள் அபிவிருத்திக்காக போராடி எந்த உரிமையும் இழந்ததாக நான் பார்க்கவில்லை - தமிழ் அரசியல்வாதிகள் இருக்கின்றவர்களை அழிக்கும் வேலைத்திட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள் : அமைச்சர் வியாளேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Monday, February 15, 2021

முஸ்லிம்கள் அபிவிருத்திக்காக போராடி எந்த உரிமையும் இழந்ததாக நான் பார்க்கவில்லை - தமிழ் அரசியல்வாதிகள் இருக்கின்றவர்களை அழிக்கும் வேலைத்திட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள் : அமைச்சர் வியாளேந்திரன்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மாவீர நாளில் முகப்புத்தகங்களின் பதிவிட்டவர்கள் சிறையிலுள்ளார்கள். இவர்களை உசுப்பேத்தியவர்கள் இன்று அரச பாதுகாப்புடன் திரிகின்றார்கள் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வாழைச்சேனைப் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மீராவோடை ஏழாம் குறுக்கு வீதியினை கொங்கிறீட் வீதியாகப்புனரமைக்கப்படுவதற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கும் பட்சத்தில் மாவட்டத்தில் வறுமையை இல்லாதொழிக்க முடியும். தமிழ் மக்களுடைய கண்ணீரையும், பிரச்சனைகளையும் வைத்துக் கொண்டு காலா காலமாக தமிழ் மக்களின் கல்லறைகளில் நின்று கொண்டு செய்கின்ற பிழைப்புவாத, வங்குரோத்து அரசியலை நாங்கள் தொடர்ந்தும் செய்ய முடியாது.

ஆகவே, மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுபவர் தான் அந்த மக்கள் தலைவனாக இருக்க முடியும். தேர்தல் காலங்களில் நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். முப்பது வருடம் இடம்பெற்ற யுத்தத்தின் இழப்பை நான்கு மாதத்தில் நிறைவு செய்ய முடியாது. நாங்கள் கட்டடம் கட்டடமாக வேலைத்திட்டங்களை செய்து முடிப்போம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கம் சார்பாக இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பினூடாக ஆயிரத்து இருநூறு பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பேரும் இல்லாது விட்டிருந்தால், இந்த வேலை குறைவாக கிடைத்திருக்கும்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் கட்சியோடு இருந்தபடியினால் அவர்கள் பகுதிகள் வளமாகக் காணப்படுகின்றது.

கடந்த காலத்தில் அவர்கள் அபிவிருத்திக்காகப் போராடி எந்த உரிமையும் இழந்ததாக நான் பார்க்கவில்லை. ஆனால், எமது சமூகத்தில் உரிமையும், அபிவிருத்தியும் இல்லை. இருக்கின்றவர்களை அழிக்கின்ற வேலைத்திட்டத்தினை எமது தமிழ் அரசியல்வாதிகள் கையிலெடுத்துள்ளார்கள்.

தமிழ்த் தேசியம் தடம் மாறலாம். ஆனால், தடம் பிறளக்கூடாது. சாத்வீகப்போராட்டம், ஆயுதம்ப்போராட்டம் இடம்பெற்றது.

தற்போது அரசியல் போராட்டமுள்ளது. இப்போராட்டம் எவ்வாறிருக்க வேண்டுமென்று சிந்திக்க வேண்டும். பல பிரச்சனைக்கு மத்தியில் வாழ்ந்த எமது தமிழ் சமூகத்தினை மீண்டும் பிரச்சனைக்குள் மாட்டி விடுகின்ற வேலைத்திட்டத்தினைச் செய்ய முடியாது.

இப்போதிருக்கும் தலைமுறையாவது நிம்மதியாக, சந்தோசமாக, இழப்புக்களைச் சந்திக்காமல் வாழ வேண்டும்.

2009ம் ஆண்டு எந்தப்பாராளுமன்ற உறுப்பினரும் மக்களுக்காகப் போராடவுமில்லை. ஆயுதக்களத்தில் இறங்கவுமில்லை. அவர்கள் குடும்பத்தோடு மாறி விட்டார்கள். இன்று ஊசுப்பேத்துகின்ற, உணர்ச்சி வசப்படுத்துகின்ற அரசியலைச்செய்ய முடியாது. அது எமது சமூகத்தினைப் பாதிக்கும்.

மாவீர நாளில் முகப்புத்தகங்களின் பதிவிட்டவர்கள் சிறையிலுள்ளார்கள். இவர்களை உசுப்பேத்தியவர்கள் இன்று அரசாங்கப்பாதுகாப்புடன் திரிகின்றார்கள். ஆனால், இவர்களின் பெற்றோர்கள் கண்ணீருடன் சிறைச்சாலை சென்று வருகின்றார்கள் என்றார்.

இராஜாங்க அமைச்சரின் வாழைச்சேனை இணைப்பாளர் எஸ்.மன்மதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மீராவோடை ஏழாம் குறுக்கு வீதியானது இரண்டு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் ஒரு கிலோ மீற்றர் கொங்கிறீட் வீதியாகப் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment