அவுஸ்திரேலியாவின் மேற்கு நகரமான பேர்த் நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ அருகிலுள்ள குடியிருப்பாளர்களை கொரோனா வைரஸை தடுப்பதற்கு அமுல்படுத்தபட்டுள்ள ஊரடங்கு நிலைமையில் வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளது.
பலத்த காற்றினால் தூண்டப்பட்ட தீ விபத்தில் குறைந்தது 59 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதோடு, ஆறு தீயணைப்பு வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 250 தீயணைப்பு வீரர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பேணி தீயை அனைக்க வெப்பமான காற்று வீசும் சூழ்நிலையில் போராடி வருகிறார்கள். ஊரடங்கை மீறுவதாக இருந்தாலும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட இந்தத் தீ இரட்டிப்பாக பரவி, பண்ணைகள் மற்றும் காட்டுப் பகுதிகள் என 7,366 ஹெக்டர் நிலம் சேதமடைந்திருப்பதாக மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் தீ மற்றும் அவசர சேவைத் திணைக்கள பிரதி ஆணையாளர் கிரேய்க் வோட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
மேற்கு அவுஸ்திரேலியா மிகவும் தீவிரமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. "தற்போது மேற்கு அவுஸ்திரேலியா இரண்டு வகையான அவசரநிலைகளை எதிர்த்துப் போராடுகிறது. அவை ஆபத்தான காட்டுத்தீ அவசரநிலை மற்றும் கொவிட்-19 ஊரடங்கு அவசரநிலை" என மாநில முதல்வர் மார்க் மெகுவன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மாநில தலைநகரில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் தீ விபத்து ஏற்படாத வகையில் வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்க தங்கள் வீடுகளில் தங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளார்கள்.
நகரில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால் மிகக் குறைந்த ஆபத்தே காணப்படுகிறது.
ஆனால் இரண்டு மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஐந்து நாட்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில் 10 மாதங்களில் முதலாவது உள்ளூர் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய் ஆரம்பித்ததிலிருந்து இருந்து அவுஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 909 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
No comments:
Post a Comment