(எம்.மனோசித்ரா)
ஜெனீவா விவகாரங்களில் எதிர்க்கட்சியின் ஆதரவு தேவைப்படுமாயின் அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் முழுமையான ஆதரவை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். அரசாங்கம் கோரிக்கை விடுக்காமல் வலிந்து சென்று ஆதரவளிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் நாடகங்கள் மற்றும் பொய்களினூடாகவே ஆட்சியை முன்னெடுத்துச் செல்கிறது. புதிய அரசியலமைப்பு, கிழக்கு முனையம் ஆகிய விடயங்களில் இவ்வாறு போலியான நாடகங்களை அரங்கேற்றிய அரசாங்கம் தற்போது பொதுஜன பெரமுனவுக்கும் முரண்பாடுகளைப் போல காண்பிக்கிறார்கள்.
நாட்டிலுள்ள உண்மையான பிரச்சினைகளை மறைப்பதற்காக ஊடகங்கள் மத்தியில் இவ்வாறான நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் தொடர்பில் போலியான தகவல்களே வெளியிடப்படுகின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் அடிப்படையற்றவையாகும். இறுதியாக ஜே.ஆர். ஜயவர்தன காலத்திலேயே இவ்வாறானதொரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை நீக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காதது தவறாகும். எனவே தாக்குதலை தடுக்க தவறியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டிய அதேவேளை, இதன் பிரதான சூத்திரதாரிகளையும் கண்டறிய வேண்டும்.
விசாரணைகளின் போது என்னிடம் மிகவும் இரகசியமான காணொளி பதிவுகள் உள்ளன. அவற்றை இங்கு (ஆணைக்குழுவில்) சமர்பிக்க வாய்ப்பளிக்குமாறு கோரினேன். எனினும் அதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அதிலிருந்தே குறித்த ஆணைக்குழு எவ்வாறான நோக்கத்தில் செயற்படுகிறது என்பது தெளிவாகியுள்ளது. தாக்குதல்களை திட்டமிட்ட குழுவினரை இனங்காண்பதற்கான எவ்வித தேவையும் கிடையாது என்ற போக்கிலேயே அரசாங்கம் பயணிக்கிறது.
ஜெனீவா விவகாரங்களில் எதிர்க்கட்சியின் ஆதரவு தேவைப்படுமாயின் அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் ஆதரவை வழங்க நாம் தயாராகவுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment