கூட்டு ஒப்பந்தம் எந்த சந்தர்ப்பத்திலும் அகற்றப்படக்கூடாது : மியன்மாரில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமை இலங்கையிலும் ஏற்படும் - வே. இராதாகிருஷ்ணன் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

கூட்டு ஒப்பந்தம் எந்த சந்தர்ப்பத்திலும் அகற்றப்படக்கூடாது : மியன்மாரில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமை இலங்கையிலும் ஏற்படும் - வே. இராதாகிருஷ்ணன்

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் முறையற்ற வெளிநாட்டு கொள்கைகளினால் இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. மறுபுறம் ஜெனீவா அமர்வுகளின் நிறைவில் இலங்கை மீது எவ்வாறான தடைகள் விதிக்கப்படும் என்று மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாட்டில் பல முக்கிய பதவிகளில் இராணுவ அதிகாரிகளே காணப்படுகிறார்கள். எனவே எதிர்காலத்தில் இலங்கையிலும் மியன்மாரில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமை ஏற்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற வெளிநாட்டு கொள்கைகளினால் இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. மறுபுறம் ஜெனீவா அமர்வுகளின் நிறைவில் இலங்கை மீது எவ்வாறான தடைகள் விதிக்கப்படும் என்று மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவுடனான நட்புறவை பகைத்துக் கொண்டு முன்னோக்கி பயணிக்க முடியாது.

கிழக்கு முனைய விவகாரங்களில் இந்தியாவிடம் சமுகமான பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்மானத்தை அறிவித்திருக்கலாம். மாறாக திடீரென இவ்வாறு அறிவித்தமையே இந்தியாவுடன் முரண்படக் காரணமாகும்.

இந்தியாவிடமிருந்து எமக்கு பல உதவிகள் கிடைக்கின்றன. இலங்கைக்கு முதன் முதலாக தடுப்பூசிகளை வழங்கியதும் இந்தியாவாகும்.

அதற்காக இந்தியாவிற்கு கிழக்கு முனையத்தை வழங்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. பேச்சுவார்த்தைகளின் மூலம் சுமூகமான தீர்வு எட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

தற்போது நாட்டில் பல முக்கிய பதவிகளில் இராணுவ அதிகாரிகளே காணப்படுகிறார்கள். எனவே எதிர்காலத்தில் இலங்கையிலும் மியன்மாரில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமை ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது என்றார்.

இதன்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் அல்லது முதலாளிமார் சம்மேளனம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 25 நாட்கள் சம்பளம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். சம்பளத்தை அதிகரித்து வேலை நாட்களை குறைப்பது அல்லது அவர்களுக்கு அழுத்தம் பிரயோகிப்பது பொறுத்தமற்றது.

அத்தோடு தொழிலாளர்களின் நலன் சார்ந்த விடயங்களில் முக்கிய பங்கு வகிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் எந்த சந்தர்ப்பத்திலும் அகற்றப்பட்டு விடக்கூடாது. அதில் கூறப்பட்டுள்ள தொழிலாளர் நலன்சார் விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் முன்னின்று செயற்பட வேண்டும்.

வேலை நாட்கள் குறைப்பட மாட்டாது என்று இலங்கை தொழிலாளர் காங்ரஸ் கூறுகின்ற போதிலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. நாட்டில் தற்போது காணப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினடிப்படையில் வேலை நாட்களை குறைத்தால் தொழிலாளர்கள் பாதிப்படைவார்கள் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad