ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் சர்வதேச மற்றும் உள்ளக மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கத்தை அரசாங்கம் நிபந்தனைகளற்ற வகையில் நிராகரிக்க வேண்டும். ஒரு நாட்டின் உள்ளக விடயங்களில் தலையிடும் உரிமை மனித உரிமை பேரவைக்கு கிடையாது. ஆகவே உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உபாயங்களை கொண்டு இம்முறை தீர்வு காண்பது அவசியமாகும் என சுட்டிக்காட்டி தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இம்மாதம் இடம்பெறவுள்ள 46 ஆவது கூட்டத் தொடர் குறித்து இலங்கை தொடர்பில் கடந்த மாதம் 27 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆணையாளரின் இலங்கை தொடர்பான மதிப்பீட்டறிக்கை குறித்து அரசாங்கம் கடும் அதிருப்தி அடைந்துள்ளமை ஊடகங்கள் ஊடாக அறிய முடிந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக மனித உரிமை ஆணையாளர் முன்வைத்த பாரதூரமான யுத்தக் குற்றச்சாட்டுக்களை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றமை தற்போதைய நெருக்கடிக்கு மூல காரணியாக காணப்படுகிறது.
இம்மாதம் இடம்பெறவுள்ள 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முனைவதாகவே ஆணையாளரின் மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தரப்பினரை சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தல் இவர்களின் சொத்துக்களை முடக்கல் ஆகிய விடயங்களில் அதிக அக்கறை கொள்ளப்பட்டுள்ளது. இது பாரதூரமானது என்பதற்கு மாற்றுக்கருத்து கிடையாது.
மனித உரிமை ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையினை ஏற்க முடியாது என்று மறுப்பு தெரிவிப்பதால் மாத்திரம் சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்ள முடியாது. பிரித்தானிய அரசாங்கத்தின் தலைமையின் கீழ் செயற்படும் நாடுகள் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. 2015 ஆம் ஆண்டும் இவ்வாறான தன்மையே காணப்பட்ட.து.
2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற கூட்டத் தொடரில் அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் இணையனுசரனை வழங்குவதாக இணக்கம் தெரிவித்த 30.1 பிரேரணையில் இருந்து விலகியமை ஏற்றுக் கொள்ள கூடியது. 30.1 பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை செயற்படுத்தும் வகையில் இம்முறை புதிய பிரேரணை மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படும். என்பதை உணர முடிகிறது.
அரசாங்கத்தை சர்வதேச அரங்கில் நெருக்கடிக்குள்ளாக்கும் சர்வதேச மட்டத்திலும், உள்ளக மட்டத்திலும் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை மனித உரிமை பேரவைக்கு கிடையாது.
ஆரம் ப காலத்தில் இருந்து நாமும் இவ்விடயத்தில் சற்று இருக்கமாக செயற்பட்டிருக்க வேண்டும். ஆகவே இம்முறை இடம்பெறவுள்ள 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் முன்வைக்கும் பிரேரணைகளை அரசாங்கம் நிபந்தனையற்ற வகையில் இரத்து செய்ய வேண்டும்.
கடந்த அரசாங்கத்தில் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தை சர்வதேச கண்காணிப்பில் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டமை எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என கடந்த அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தோம். ஆனால் அவை குறித்து நல்லாட்சியின் அரச தலைவர்கள் கவனம் செலுத்தவில்லை.
காணாமல் போனோர் அலுவலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்லும் அளவிற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளமை அவதானத்திற்குரியது.
சர்வதே அரங்கில் முன்வைக்கப்படும் பிரேணைகளுக்கு இணையனுசரனை வழங்குவதாகவும், பரிசீலனை செய்வதாகவும் குறிப்பிட்டால் இலங்கை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். 2015 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு காலவகாசம் கோருவது அவசியமாகும்.
முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஜவினால் நியமிக்கப்பட்ட மெக்ஷ்வெல் பரணகம ஆணைக்குழுவினரால் வழங்கப்பட்ட 6 அறிக்கையில் இலங்கை இராணுவத்தினரால் யுத்த குற்றங்கள் இடம்பெறவில்லை. என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பிரித்தானியரான நேஸ்பி ஷாம் இலங்கைக்கு சார்பாகவே செயற்பட்டுள்ளார். இலங்கை தொடர்பில் சர்வதேச அரங்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், இலங்கைக்கான பூகோளிய ஒன்றியம் அறிக்கை தயாரித்துள்ளது. இவ்வறிக்கையினை மனித உரிமை பேரவையில் சிவில் அமைப்புக்கள் சார்பில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உபாயங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நெருக்கடிக்கு தீர்வை காண்பது அவசியமாகும். இவ்விடயத்தில் அனைத்து தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட அறிக்கைகளும் முழுமையாக பரிசீலனை செய்வது சாதகமாக அமையும்.
No comments:
Post a Comment