'குருந்தகம' என்பதே தற்போது குறுந்தூர் மலையாகியுள்ளது - வட, கிழக்கில் 99 வீதமானவை பௌத்த மரபுரிமைகளுடன் தொடர்புடையவை : எல்லாவல மேதானந்த தேரர் - News View

Breaking

Post Top Ad

Friday, February 5, 2021

'குருந்தகம' என்பதே தற்போது குறுந்தூர் மலையாகியுள்ளது - வட, கிழக்கில் 99 வீதமானவை பௌத்த மரபுரிமைகளுடன் தொடர்புடையவை : எல்லாவல மேதானந்த தேரர்

(எம்.மனோசித்ரா)

'குருந்தகம' என்பதே தற்போது குறுந்தூர் மலையாகியுள்ளது. இதனை எம்மால் நிரூபிக்க முடியும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தொல்பொருள் முக்கியத்துவமுடைய ஸ்தானங்களில் 99 வீதமானவை பௌத்த மரபுரிமைகளுடன் தொடர்புடையவையாகும் என்று எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

குருந்தூர்மலை பௌத்த மரபுரிமை என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதனை தேசிய உரிமையான அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும். மாறாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் இதனை தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக வீண் பிரச்சினையாகக் கூடாது என்றும் எல்லாவல மேதானந்த தேரர் கூறினார்.

குறுந்தூர்மலை உள்ளிட்ட தொள்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இணைய வழியூடாக நடைபெற்றது. இதன் போதே தேரர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் காணப்படும் ஆயிரக்கணக்கான தொல்பொருள் ஸ்தானங்கள் தொடர்பில் நான் பல சந்தர்ப்பங்களில் ஆராய்ந்திருக்கின்றேன். அவற்றில் 99 சதவீதமானவை பௌத்த மரபுரிமைகளுடன் தொடர்புடையவையாகும். இவ்வாறிருக்க குருந்தூர் மலை விவகாரத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் தவறான நிலைப்பாடுகளை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தியுள்ளனர்.

'குருந்தகம' என்ற இடமே தற்போது குருந்தூர் மலையாகியுள்ளது. நான் இந்த இடத்திற்கு மூன்று தடவைகள் சென்றிருக்கின்றேன். முதன்முறையாக அங்கு சென்ற போது தமிழ் மக்கள் எவ்வித பேதமும் இன்றி எம்மை வரவேற்றனர். அவர்களுடன் எந்த பிரச்சினையும் காணப்படவில்லை. அங்கு சென்று ஆராய்ந்த போது அதிகளவான தொல்பொருள் சான்றுகளைக் கொண்டவொரு இடமாக அது இனங்காணப்பட்டது.


1905 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒருவரால் செய்யப்பட்ட ஆராய்விலும் இது பௌத்த மரபுரிமைக்குரியது என்பது நிரூபிக்கப்பட்டது. இதனைப் போன்று பல ஆங்கிலேயர்களால் ஆராய்வு செய்யப்பட்டு அவற்றிலும் இது பௌத்த மரபுரிமைக்குரியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த இடத்திற்கு நீண்ட வரலாறு உள்ளது. அத்தோடு பொலன்னறுவை இராசதானி காலத்தில் பௌத்த மன்னர்களால் இந்த இடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்தற்கான ஆதாரங்களும் உள்ளன.

எனவே குருந்தூர் மலை என்ற குருந்தகம பௌத்த விகாரை என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் காணப்படுகின்ற மலைகள் பௌத்த விகாரைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும். அவற்றில் பல விகாரைகள் இடிக்கப்பட்டு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

வவுனி குளம், கனகராயன் குளம், ஒட்டுச்சுட்டான், மருதனார் குளம், கோணேஷ்வரம் உள்ளிட்டவையும் பௌத்த விகாரைகளை அகற்றி அமைக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றை உடைக்குமாறு எந்த சந்தர்ப்பத்திலும் நாம் கூறவில்லை. பொலன்னறுவையிலும் இது போன்று அமைக்கப்பட்டுள்ள சிவன் கோவிலை நாம் பாதுகாத்து வருகின்றோம். காரணம் இவை தேசிய உரிமைகளாகும்.

குருந்தூர்மலை பௌத்த மரபுரிமை என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதனை தேசிய உரிமையான அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும். மாறாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் இதனை தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக வீண் பிரச்சினையாகக் கூடாது. அப்பாவி தமிழ் மக்களுக்கு இதில் எவ்விட தொடர்பும் இல்லை. இதில் எவ்வித இன மத பேதமும் கிடையாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad