இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களில் 70 சதவீதமானவை 60 வயதுக்கு மேற்பட்டோர் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, February 5, 2021

இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களில் 70 சதவீதமானவை 60 வயதுக்கு மேற்பட்டோர் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களில் 70 சதவீதமானவை 60 வயதுக்கு மேற்பட்டோரது மரணங்களாகும். எனினும் தொற்றுக்குள்ளான வீதத்தில் அந்த எண்ணிக்கை மிகக் குறைவாகும். எனவே எதிர்வரும் காலங்களிலும் இதே போன்று முதியோர் தொற்றுக்குள்ளாவதை தவிர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் தற்போது நாளொன்றுக்கு 700 - 800 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு குறைவடைந்துள்ளதனாலேயே தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. எனவே தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைகின்றமையை அபாயம் குறைவடைவதாகக் கருத முடியாது.

அத்தோடு பெப்ரவரி மாத்தின் முதல் 5 நாட்களில் மாத்திரம் 20 மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த காலங்களில் கொரோனா மரணங்களும் கொழும்பையும், மேல் மாகாணத்தையும் மாத்திரமே நிலைகொண்டிருந்தன. ஆனால் தற்போது ஏனைய பல மாகாணங்களிலும் மரணங்கள் பதிவாக ஆரம்பித்துள்ளன. இந்த அபாய நிலைமையை சரியாக புரிந்து கொண்டு செயற்படாவிட்டால் 2021 ஆம் ஆண்டு 2020 ஐ விட பாரதூரமானதாகும்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நாடளாவிய ரீதியில் 40 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை தொடர்ச்சியான கண்காணிப்பது இலகுவானதல்ல. எனவே தனிமைப்படுத்தல் முறைமைகள் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் செயற்பாடுகளையும் துரிதப்படுத்த வேண்டும்.

தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் இரண்டரை இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்குவதற்கு இரு வார காலம் தேவைப்படுகிறது. அவ்வாறிருக்கையில் முழு சமூகத்திற்கும் தடுப்பூசி எவ்வாறு வழங்கப்படும் என்பதை தற்போதிலிருந்தே திட்டமிட வேண்டும்.

நாட்டில் இனங்காணப்பட்டுள்ள 67,000 தொற்றாளர்களில் 90 வீதமானோர் 60 வயதிற்கு குறைந்தவர்களாவர். எஞ்சிய 10 வீதமே 60 வயதுக்கு மேற்பட்டோராவர். ஆனால் மரணங்களின் அடிப்படையில் அவதானிக்கும் போது 70 வீதமானவை 60 வயதுக்கு மேற்பட்டோரின் மரணங்களாகும். எவ்வாறிருப்பினும் முதியோர் மத்தியில் வைரஸ் தொற்று பரவுவதற்கு இடமளிக்காமலுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றார்.

No comments:

Post a Comment