இதுவரை 85 சதவீத சேவையாளர்கள் தடுப்பூசி பெற்றுள்ளனர் - பொதுமக்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் : வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் - News View

Breaking

Post Top Ad

Saturday, February 6, 2021

இதுவரை 85 சதவீத சேவையாளர்கள் தடுப்பூசி பெற்றுள்ளனர் - பொதுமக்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் : வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

“வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கும் பணிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தடுப்பூசி மருந்து கிடைத்ததும் மறுநாளே பொதுமக்களுக்கு வழங்கும் பணி ஆரம்பிக்கப்படும்” என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். 

பொதுமக்களுக்கு வயது அடிப்படையில் கொவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்க சுகாதார அமைச்சினால் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதனால் வடக்கு மாகாணத்தில் பொதுமக்களில் வயது அடிப்படையிலான விவரங்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து தயாராக வைத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி கடந்த 30ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி மருந்து வழங்கலுக்கு வடக்கு மாகாணத்தில் 9,944 சுகாதாரத் துறை சேவையாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இந்தப் பணியில் முதல் நாளில் 2,997 பேர் கொவிட்-19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். இது 30 சதவீதத்தினர் ஆகும்.

இரண்டாம் நாளில் வட மாகாணத்தில் 1,530 சுகாதார சேவையாளர்கள் கொவிட்-19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். 7ஆம் நாளான இன்று 217 பேர் கொவிட்-19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். இதுவரை 85 சதவீத சேவையாளர்கள் தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். 

பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பம் தரிக்க காத்திருப்போர் என மூன்று வகையினரை இந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதனால், அவ்வாறானவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள நாளை மேலும் ஒருநாள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad