புதிய அரசியலமைப்பிற்கான பொதுஜன பெரமுனவின் யோசனைகள் புதன்கிழமை சமர்பிக்கப்படும் - நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இவ்வருட டிசம்பர் மாதத்துக்குள் நிறைவேற்றுவோம் : பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் - News View

Breaking

Post Top Ad

Saturday, February 6, 2021

புதிய அரசியலமைப்பிற்கான பொதுஜன பெரமுனவின் யோசனைகள் புதன்கிழமை சமர்பிக்கப்படும் - நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இவ்வருட டிசம்பர் மாதத்துக்குள் நிறைவேற்றுவோம் : பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

உத்தேச அரசியலமைப்பில் தேர்தல் முறைமை முழுமையாக மாற்றியமைக்கப்படும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள். புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுஜன பெரமுனவின் யோசனைகளை எதிர்வரும் புதன்கிழமை நிபுணர் குழுவிடம் முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம் என பொதுஜன பெரமுனவின் தவிசாளரும், கல்வி அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

உத்தேச புதிய அரசியலமைப்பு குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போது நடைமுறையிலுள்ள இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு 42 வருட காலம் பழமையானது. தற்போதைய அரசியல் மற்றும் சமூக மாற்றத்துக்கு அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பொருத்தமற்றதாக உள்ளது. ஆகவே கால தேவைக்கு ஏற்ப பொருந்தும் அரசியலமைப்பினை உருவாக்குவதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. 

புதிய அரசியலமைப்பினை உருவாக்க இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் முயற்சித்த போதும் அதனை செயற்படுத்த முடியவில்லை. எக்கட்சி தலைமையிலான அரசாங்கமும் இதுவரையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெறவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தல் காலத்திலும், பொதுத் தேர்தல் காலத்திலும் அரசியலமைப்பு தொடர்பில் இரண்டு பிரதான வாக்குறுதிகளை நாட்டு மக்களுக்கு வழங்கியது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நீக்கல், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகியவை அவற்றில் பிரதானமானவையாகும். 

இடம்பெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜனவர்தன குறிப்பிட்ட கருத்தை பெரும்பான்மை மக்கள் மாற்றியமைத்துள்ளார்கள்.

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் யோசனைகளை இரண்டு மாத காலத்துக்குள நிபுணர்கள் குழுவிடம் முன்வைக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் யோசனைகளை எதிர்வரும் புதன்கிழமை குழுவினரிடம் முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இவ்வருடத்தின் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவேற்றுவோம். அரசியலமைப்பு விடயத்தில் தாமதம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad