கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கான ஆஸ்பத்திரிகள் 80ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கென 11 ஆயிரத்து 766 கட்டில்கள் தயாராக உள்ளதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்
ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் தற்போது கொரோனா வைரஸ் சிகிச்சை மத்திய நிலையங்களின் கட்டில்களில் 6 ஆயிரத்து 747 கட்டில்கள் நோயாளிகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இக்காலங்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து பெருமளவு நோயாளிகள் இனங்காணப்பட்டு வரும் நிலையில் அதனை சிக்கலாக்கி கொள்ளாமல் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டே சமூகத்துக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 77 ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில் 400 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
அதேவேளை, கொரோன வைரஸ் கட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்தால் சட்டங்களை கடுமையாக்க வேண்டிவரும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டின் 22 மில்லியன் மக்களை பராமரிப்பதற்காக நாட்டில் போதியளவு சுகாதார ஊழியர்கள் கிடையாது. அந்த வகையில் சுகாதாரத் துறையினர் மற்றும் இராணுவத்தினரால் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது என்பதை சகலரும் உணர வேண்டும். அனைவரது ஒத்துழைப்பும் மிக அவசியம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் கொரானா வைரஸ் வேகம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார மருத்துவ அதிகாரி விசேட மருத்துவ நிபுணர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
திருமண வைபவங்கள் போன்ற நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என எச்சரித்துள்ள அவர் அவ்வாறான நிகழ்வுகளை தவிர்க்காது போனால் கொழும்பு மாவட்டத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment