(எம்.மனோசித்ரா)
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது. இம்முறை நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 22,000 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதோடு, 4,513 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 4,513 பரீட்சை நிலையங்களுக்கும் மேலதிகமாக, மாகாண மட்டத்தில் மேலதிக பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு பரீட்சைக்கு தோற்றும் எந்தவொரு மாணவருக்கேனும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதன் போது முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கான முன்னேற்பாடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரு விஷேட பரீட்சை நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பரீட்சை நடைபெறும் பிரதேசத்தில் சீரற்ற காலநிலையால் பரீட்சை நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது தொடர்பில் துரிதமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், பரீட்சார்த்திகளை பாதுகாப்பாக பரீட்சை நிலையங்களை அழைத்துச் செல்வதற்கும் இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்புக்கள் பெற்றுக் கொள்ளப்படும்.
பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய மாணவர்களின் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சை நடைபெறும் நாட்களில் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை போக்குவரத்து திணைக்களம் மற்றும் சாலை பயணிகள் போக்குவரத்து ஆணையகம் என்பவற்றுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனவே பரீட்சார்த்திகளுக்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment