(எம்.மனோசித்ரா)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாவதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த எந்தவொரு தலைவரும் இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இலங்கையில் சீன ஆதிக்கத்திற்கு இடமளித்து இந்தியாவுடன் சுமூகமற்ற உறவை ஏற்படுத்திக் கொண்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு முன்னரிருந்த எந்தவொரு தலைவரும் இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எனினும் அவர் ஜனாதிபதியானதன் பின்னர் இலங்கையில் சீன ஆதிக்கத்திற்கு இடமளித்து இந்தியாவுடன் சுமூகமற்ற உறவை ஏற்படுத்திக் கொண்டார். சீனாவிடமிருந்து பல மில்லியன் கடன் பெற்றுக் கொண்ட போதிலும் அதனால் நாட்டுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.
தற்போது கிழக்கு முனைய விவகாரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேற்கு முனையத்தை வழங்குவதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும், இந்தியா அதனை பெற விருப்பம் தெரிவிக்குமா என்பது கேள்விக்குரியாகும்.
2019 நல்லாட்சி அரசாங்கம் இந்தியா, ஜப்பானுடன் கூட்டு முயற்சியில் ஒப்பந்தம் கையெழுத்திட்டிருந்தது. எனினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனேயே ஜப்பான் இதிலிருந்து விலகிக் கொண்டது.
நல்லாட்சி அரசாங்கம் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் 49 வீதத்தை விற்பதாக எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. அந்த யோசனை தற்போதைய அரசாங்கத்தினாலேயே முன்னெடுக்கப்பட்டது.
அதற்கான யோசனையையும் அரசாங்கமே முன்வைத்து தற்போது அவர்களே அதனை மீளப் பெற்றுள்ளனர். இதுதான் அவர்களின் சாதனையாகும்.
நாம் ஒப்பந்தம் கையெழுத்திட்ட போது கிழக்கு முனையத்தை விற்பதற்கு முயற்சிக்கப்படுவதாக போலியான விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த எந்த தலைவர்களும் நாட்டில் சிறு இடத்தையும் யாருக்கும் வழங்கவில்லை என்றார்.
No comments:
Post a Comment