கடவத்தை, பதவியா மற்றும் தெரணியகல ஆகிய பிரதேசங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது கைகுண்டு, வெளிநாட்டில் தயாரிக்கப்படும் துப்பாக்கி உள்ளிட்டவற்றுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடவத்தை
கடவத்தை பிரதேசத்தில் கைக் குண்டுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்தை வீதிக்கருகில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதவியா
பதவிய பொலிஸாரினால் மோட்டார் சைக்கிளொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, அதில் பயணித்த நபர்களிடமிருந்து வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகள் 7 கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதோடு மற்றைய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் வெலிஓய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
தெரணியகல
தெரணியகல பிரதேசத்தில் சீதாவாக்கை குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் போர 12 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைகுண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவை தொடர்பில் கடவத்தை , பதவியா மற்றும் தெரணியகல பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
துப்பாக்கிகள் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தயாரிப்பு வெடி மருந்துகள் என்பவற்றை தம்வசம் வைத்திருப்பது குற்றமாகும். குற்றத் தடுப்பு பிரிவினர் ஊடாக இது போன்ற சுற்றிவளைப்புக்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க இலங்கை பொலிஸ் எதிர்பார்த்துள்ளது.
ஒரு புறம் கொவிட் கட்டுப்பாட்டு செயற்பாடுகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ள போதிலும் அவர்களின் சம்பிரதாய செயற்பாடுகளான சுற்றி வளைப்புக்கள், சோதனை நடவடிக்கைகள் என்பன வழமையைப் போன்றே முன்னெடுக்கப்படும்.
No comments:
Post a Comment