வடக்கின் 3 தீவுகளை சீனாவுக்கோ இந்தியாவிற்கோ கொடுக்க இதுவரை அரசாங்கம் தீர்மானிக்கவில்லை - இலங்கையின் தேசிய வளங்களை வேறு எந்தவொரு நாட்டுக்கும் கொடுக்கும் நோக்கமும் எமக்கு இல்லை : அமைச்சர் டலஸ் அழகபெரும - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 24, 2021

வடக்கின் 3 தீவுகளை சீனாவுக்கோ இந்தியாவிற்கோ கொடுக்க இதுவரை அரசாங்கம் தீர்மானிக்கவில்லை - இலங்கையின் தேசிய வளங்களை வேறு எந்தவொரு நாட்டுக்கும் கொடுக்கும் நோக்கமும் எமக்கு இல்லை : அமைச்சர் டலஸ் அழகபெரும

(ஆர்.யசி)

வடக்கில் மூன்று தீர்வுகளில் நிர்மாணிக்க தீர்மானித்துள்ள மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவிற்கு கொடுப்பது குறித்தோ அல்லது சீனாவிற்கு கொடுப்பது குறித்தோ இறுதித் தீர்மானம் எதனையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

உலகின் எந்தவொரு பலமான நாட்டின் கொள்கைத் திட்டத்திற்கும் எமது நாட்டின் தேசிய கொள்கையை பலவீனப்படுத்தி தீர்மானம் எடுக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, வாய்மூல வினாக்கான விடைகள் நேரத்தில் வடக்கின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கும் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜயசிறி எம்.பி கேள்வி எழுப்பிய வேளையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போதே மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகபெரும இவற்றை கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கின் மூன்று தீவுகள் சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தவறான கருத்தாகும், அதேபோல் இந்த மூன்று தீவுகளுக்குமான மின்சாரம் இன்றும் டீசல் மற்றும் ஜெனரேட்டர் மூலமாகவே பெற்றுக் கொள்ளப்படுகின்றது.

எனவே இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட வாழ்கையை வாழ்ந்து வருகின்றனர். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன். எனவே மின்சாரத்தை பெற்றுக் கொடுக்க வேண்டியது தேசிய தேவையாகும்.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் இது குறித்து சர்வதேச விலைமனுக்கோரலுக்கு விடப்பட்டது. இது இலங்கையின் முதலாவது கலப்பு விலைமனுக்கோரலாகும். காற்று மற்றும் சூரிய சக்தியினால் மின்சாரத்தை உருவாக்கும் முதலாவது வேலைதிட்டமாகவே இது அமைந்தது.

எனவே இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க சர்வதேச விலைமனுக்கோரல் விடப்பட்ட வேளையில் அதற்காக முன்வந்த தரப்பினர் பலவீனமானவர்களாக இருந்தனர். எனவே 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாவது விலைமனுக்கோரலை அறிவித்தனர்.

இதற்கு நான்கு நிறுவனங்கள் முன்வந்தனர். இந்த நான்கு நிறுவனங்களில் ஒன்று சீனாவினதும் மற்றயது இந்திய நிறுவனமாகவும் இருந்தது.

இந்திய நிறுவனத்தின் பெயர் ஸ்டலின் என்பதாகும். இந்த விலைமனுக்கோரலில் இந்திய நிறுவனம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் இந்த வேலைத்திட்டத்தை பெற்றுக் கொண்டது.

எனவே இந்த விலைமனுக்கோரலில் எந்த தவறும் இல்லை, ஆனால் அமைச்சரவையில் இந்த திட்டம் இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை, ஏனென்றால் திறைசேரி ஏற்கனவே இந்த திட்டத்தை எவ்வாறு கையாளப்போகின்றது என்ற தொழிநுட்ப ரீதியிலான தகவல்களை முன்வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா இந்த திட்டத்திற்காக நிதி உதவியொன்றை செய்யவும் ஆர்வமாக உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் எமக்கு அறிவித்தார்.

இந்த விடயத்தில் எப்போது வரையில் எந்தவித இறுதித் தீர்மானமும் எடுக்கவில்லை. எவருக்கும் அங்கீகாரம் கொடுக்கவும் இல்லை. எனவே இதில் எந்தவொரு நாட்டின் தலையீடுகளோ அல்லது, இராஜதந்திர நகர்வுகளோ இல்லை.

இலங்கையின் தேசிய வளங்களை வேறு எந்தவொரு நாட்டுக்கும் கொடுக்கும் நோக்கமும் எமக்கு இல்லை. எமது நாட்டின் தேசிய கொள்கையை உலகின் எந்தவொரு பலமான நாட்டின் கொள்கைத்திட்டத்திற்கும் அடிபணிந்து தீர்மானம் எடுக்க மாட்டோம் என்பது தெளிவாக தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment