குருநாகல் மாவட்டத்தில் 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளைகளில் 75 வீதமானோர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் - நிக்கவெரட்டி உதவி பொலிஸ் அத்தியட்சர் யூ. டி. அலவத்த - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

குருநாகல் மாவட்டத்தில் 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளைகளில் 75 வீதமானோர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் - நிக்கவெரட்டி உதவி பொலிஸ் அத்தியட்சர் யூ. டி. அலவத்த

குருநாகல் மாவட்டத்தில் இதுவரையில் 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளைகளில் 75 வீதமானோர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். அதிகஷ்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்நிலையினைக் காண முடிவதோடு, அதில் கொடவேஹர, ரஸ்நாயகபுர, பொல்பித்திகம, யாபஹூவ, கிரிபாவ போன்ற பிரிவுகளில் இந்நிலையினை அதிகளவில் காண முடியும் என நிக்கவெரட்டி உதவி பொலிஸ் அத்தியட்சர் யூ. டி. அலவத்த தெரிவித்தார். 

கொட்டவேஹர பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலும் கூறியதாவது, மாவட்டத்தில் இளம் பெண்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக கிடைக்கும் தகவல்களை விட வெளியில் வராத சம்பவங்கள் அதிகமாகும். பிள்ளைகளை விட்டுவிட்டு பெற்றோர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்கின்றமை, இதனால் பாட்டிகளிடத்தில் பிள்ளைகள் வளர்கின்றமையே இவ்வாறான நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

சில பிள்ளைகள் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களைக் குறைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்க வேண்டும்.

விசேடமாக 9, 10ஆம் வகுப்புக்களில் கற்கும் பிள்ளைகளே அதிகளவில் இவ்வாறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் பிள்ளைகள் என இனங்காணப்பட்டுள்ளனர். 

கடந்த மாதத்தில் சிறுமி ஒருத்தி பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நிக்கவெரட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான வல்லுறவுச் சம்பவங்களில் சிறுமிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது பாட்டன், சித்தப்பா அல்லது நெருங்கிய உறவினர்களினாலாகும். இது மிகவும் வேதனைக்குரிய நிலையாகும். 

வரும் காலங்களில் இது தொடர்பில் பாடசாலைகள் உள்ளிட்ட ஏனைய அனைத்து பிரிவுகளையும் அறிவுறுத்த வேண்டியுள்ளது. விசேடமாக பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றார்.

புத்தளம் விசேட நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad