இந்தியாவை வெளிப்படையாக பகைக்காது 13 ஐ முற்றாக நீக்கவே புதிய அரசியலமைப்பு உருவாக்கும் : சுரேஷ் பிரேமச்சந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

இந்தியாவை வெளிப்படையாக பகைக்காது 13 ஐ முற்றாக நீக்கவே புதிய அரசியலமைப்பு உருவாக்கும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

(ஆர்.ராம்)

இந்தியாவை வெளிப்படையாக பகைக்காது 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்காகவே புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் களமிறங்கியுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளரும், மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகளின் பின்னால் உள்ள அரசாங்கத்தின் சூட்சுமமான திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய ஆட்சியாளர்கள் தமக்கு தேவையான சர்வாதிகாரத்தினை வலுப்படுத்துவற்கான ஏற்கனவே அரசியலமைப்பில் 20ஆவது திருத்தச் சட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். அதன் மூலம் ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தபட்டிருக்கின்றது. 

தற்போதைய நிலையில் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காகவும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டிற்கு அமைவாகவும் அடிப்படைச் சட்டத்தினை மாற்றுவதற்காகவுமே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

உண்மையிலேயே உருவாக்கப்படும் அரசியலமைப்பானது சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாகவோ அல்லது இனப் பிரச்சினைக்கு தீர்வளிக்க கூடியதாகவோ அமையும் என்று நாம் கருதவில்லை. 

அரசாங்கத்தின் சமகாலச் செயற்பாடுகளின் அடிப்படையில் பார்க்கின்றபோது புதிய அரசியலமைப்பானது தமிழர்களின் கோரிக்கைகளுக்கு எதிரானதாகவே அமையும் என்றே எண்ண முடிகின்றது.

இந்நிலையில் மிக முக்கியமாக 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அகற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. 

அதன் மூலம் மாகாண சபை முறைமைகளை முழுமையாக நீக்குவதும் மத்திய அரசாங்கத்தின் மூலம் நேரடியான ஆட்சியை முன்னெடுப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாகவும் உள்ளது.

ஆகவே 13ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்கி அதன் மூலம் மாகாண சபை முறைமைகளை நீக்கப்படுமாயின் அதனால் இந்தியாவின் அழுத்தங்களுக்கு அல்லது நேரடியான தலையீடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படலாம் என்று இலங்கை அரசாங்கம் கருகின்றது.

எனவே, புதிய அரசியலமைப்பின் பெயரால் 13ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்குவதன் மூலம் தமது திட்டத்தினை சூட்சுமமாக முன்னெடுப்பதற்கு அசராங்கம் காய்களை நகர்த்துகின்றது. இவ்வாறான செயற்பாட்டின் மூலமாக இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்படாது என்பதும் அரசாங்கத்தின் அரசியல் கணக்காக உள்ளது.

இந்நிலையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்கவுள்ளதாக கூறும் அரசாங்கம் 13ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தகமாவும், மாகாண சபைகள் தொடர்பாகவும் தமது நிலைப்பாட்டினை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment