கடந்த 13 வருடங்களாக அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பளித்தது - News View

About Us

About Us

Breaking

Friday, February 19, 2021

கடந்த 13 வருடங்களாக அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பளித்தது

(எம்.எப்.எம்.பஸீர்)

ரூபவாஹினியில் இரவு வேளையில் ஒளிபரப்பான 'இரா அந்துரு பட' எனும் நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி, உயர் மட்ட அழுத்தம் காரணமாக, ஒளிபரப்பின் இடை நடுவே நிறுத்தப்பட்டமை ஊடாக, அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரினதும் அந்நிகழ்ச்சியை பார்வையிட்டுக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவரதும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் குறித்த இருவருக்கும் அரசினால் தலா 30 ஆயிரம் ரூபாவும் ரூபவாஹினி தலைவரினால் தலா 50 ஆயிரம் ரூபாவும் நட்டஈடு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 13 வருடங்களாக விசாரிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்தே, உயர் நீதிமன்றின் நீதியரசர்களான புவனேக அளுவிஹார, பிரியந்த ஜயவர்தன மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் திகதி இரவு ஒளிபரப்பான குறித்த நிகழ்ச்சியில், முன்னாள் ஆளுநரான தம்ம திஸாநாயக்க, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான சரித்த ஹேரத், அப்போதைய சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டாளர் ஊடகவியலாளர் உவிது குருகுலசூரிய ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது அப்போது அரசாங்கம் எடுத்த சில தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் குருகுலசூரிய விடயங்களை தெளிவுபடுத்திக் கொண்டிருக்கும் போது, திடீரென விளம்பர இடைவேளை விடப்பட்டு அதனுடன் நிகழ்ச்சி இடை நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

இந்நிலையிலேயே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் குருகுலசூரியவும், அந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்துள்ள ஜே.கே.எம். ஜயசேகர எனும் பார்வையாளரும் தமது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை ரூபாவாஹினி அப்போதைய அதன் தலைவர் ஆரியரத்ன அத்துகல, தயாரிப்பாளர் லக்ஷ்மன் முத்துதந்ரி, அப்போதைய ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் இம்மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 13 வருடமாக மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 14 (1) 2 ஆம் உறுப்புரை ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள, முதலாம் மனுதாரரின் கருத்து, கருத்து வெளிப்பாட்டு உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்தது. 

அதேபோல் பார்வையாளரின் உரிமையும் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்தே அவர்களுக்கு நட்டஈடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி. வெலி அமுன, சிரேஷ்ட சட்டத்தரணி பசிந்து சில்வா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்னம், பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே, சட்டத்தரணிகளான நிர்மலன் விக்னேஷ்வரன், லசந்த குருசிங்க உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment