ரூபா 10 கோடிக்கும் (ரூ. 100 மில்லியன்) அதிக மதிப்புள்ள ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு திட்டமிட்ட குற்றப் பிரிவு அதிகாரிகளால் இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நுகேகொடை, கம்சபா சந்தி பகுதியிலுள்ள, 7 அறைகளைக் கொண்ட தங்குமிடமொன்றில், இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர், குறித்த நிறுவனத்தின் முகாமையாளரிடமிருந்து இவ்வாறு போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது, 5 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், 29 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சந்தேநகநபரை, கங்கொடவில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அபாயகரமான ஒளடதங்கள் சட்டத்தின் கீழ், சந்தேகநபரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான உத்தரவை பெறவுள்ளதாகவும் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment