பாட்டியுடன் தரம் 01 இற்கு முதல் நாள் பாடசாலை சென்ற இரட்டையர்களில் ஒருவர் விபத்தில் பலி - News View

Breaking

Post Top Ad

Monday, February 15, 2021

பாட்டியுடன் தரம் 01 இற்கு முதல் நாள் பாடசாலை சென்ற இரட்டையர்களில் ஒருவர் விபத்தில் பலி

பாடசாலைக்கு தரம் ஒன்றில் அனுமதிக்கப்படுவதற்கு தனது பாட்டியுடன் பாடசாலைக்குச் சென்ற 06 வயது நிரம்பிய மாணவன், விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று, பதுளையில் இடம்பெற்றுள்ளது.

இன்று (15) காலை 8.00 மணியளவில் குறித்த பாலகன் உள்ளிட்ட இரட்டையர்களான சிறுவர்கள் இருவரும், பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் அனுமதிப்பதற்காக தனது பாட்டியுடன் சென்றுள்ளனர். 

இதன்போது, பாடசாலையை அண்மித்த நிலையில், லொறியொன்று பாட்டியையும், சிறுவர்களையும் மோதியுள்ளது.

குறித்த லொறி, அருகிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு வீதிக்கு வரும்போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பதுளை பொலிஸ் நிலைய போக்கு வரத்து பிரிவு பொறுப்பதிகாரி, ஏ.வி. அநுர தெரிவித்தார்.

லொறிச் சாரதியின் அசமந்தப் போக்கே இவ்விபத்திற்கான காரணமென, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக, ஏ.வி. அநுர மேலும் தெரிவித்தார்.

பதுளை, சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு செல்லும் பதுளை தேவாலய வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் குறித்த இரட்டையர்களில் ஒருவரான, பதுளை, அசேலபுரவைச் சேர்ந்த சிவநேசன் வருண் ப்ரஜிஸ் எனும் 6 வயது நிரம்பிய சிறுவன் ஸ்தலத்திலேயே பலியானதுடன், பாட்டி படுகாயமுற்ற நிலையில், பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுவனை பதுளை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும், சிறுவன் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றைய சிறுவன் எவ்வித ஆபத்துகளுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

இவ்விபத்து குறித்து, பதுளை பொலிசார் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டதுடன், லொறியின் சாரதியை கைது செய்து, பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

(பதுளை விசேட நிருபர் - எம். செல்வராஜா)

No comments:

Post a Comment

Post Bottom Ad