(செ.தேன்மொழி)
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்திலுள்ள மீன் சந்தைகள், மரக்கறி விற்பனை நிலையங்கள், பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் வாராந்த சந்தைகளிலும் எழுந்தமானமாக அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, நாடளாவிய ரீதியில் ஏழு பொலிஸ் பிரிவுகள் மாத்திரமே தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பில் ஐந்து பொலிஸ் பிரிவுகளும், ருவன்வெல்ல, காத்தான்குடி ஆகிய பொலிஸ் பிரிவுகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் வசிப்பவர்களை தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகள் மற்றும் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பொலிஸ் பிரிவுகளில் நேற்று மக்கள் ஒன்றுகூடி உரையாடல்களில் ஈடுபடுவதையும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக மேலும் நெருக்கடி நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த மக்கள் கூட்டத்தில் வைரஸ் தொற்றாளர் ஒருவர் இருந்திருந்தாலும் ஏனையவர்களுக்கும் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம். அவ்வாறு வைரஸ் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் அந்த பகுதிகளை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க முடியாது. அதனால் குறைபாடுகள், சிக்கல்கள் காணப்பட்டாலும் சில தினங்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைய செயற்பட வேண்டியது கட்டயமாகும்.
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளான முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் நேற்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 74 பேர் கைது செய்யபபட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2172 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை கடைப்பிடிக்காதவர்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றனர். முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதுடன், அவர்களை பி.சீ.ஆர். அல்லது அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகள் செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாதவர்கள் ஊடாக வைரஸ் தொற்று அதிகளவில் பரவலடைய வாய்ப்புள்ளது என்றே சுகாதார பிரிவு தெரிவித்து வருகின்றது. இதனால் சமூகத்திற்கு மேலும் நெருக்கடி நிலைமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாகவே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் காணப்படும் மீன் சந்தைகள், பொருளாதார மத்திய நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் மற்றும் வாராந்த சந்தைகளை இலக்குவைத்து எழுந்தமானமாக அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment