வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடி குண்டு, கூரிய ஆயுதங்களுடன் பாதாள குழு முக்கிய உறுப்பினர் உட்பட இருவர் கைது..! - News View

Breaking

Post Top Ad

Sunday, January 3, 2021

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடி குண்டு, கூரிய ஆயுதங்களுடன் பாதாள குழு முக்கிய உறுப்பினர் உட்பட இருவர் கைது..!

(செ.தேன்மொழி)

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடி குண்டு மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பாதாள குழு முக்கிய உறுப்பினர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பாதாள குழு உறுப்பினர் பொடி விஜே என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சந்தேகநபர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 11 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்றும், இவருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வெல்லம்பிட்டி பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை வெல்லம்பிட்டி - சிங்கபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 40 வயதுடைய சிசிர குமார எனப்படும் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும், அபயகரமான கூரிய ஆயுதங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபருக்கு, கடந்த 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித கொலைத் தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அன்றிலிருந்து 11 வருடங்கள் இவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை, சந்தேகநபர் சிறையில் இருந்த காலப்பகுதியில், அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி நீதிபதி சரத் அம்பேபிட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு கைதியை தாக்கியதாக, மேலும் ஒரு வருடம் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை 2001 ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதல் செய்ததாகவும் சந்தேகநபருக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் அவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான குண்டுத் தாக்குதல் விவகாரம் தொடர்பில் தற்போதும் சந்தேகநபருக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

புதுவருடப் பிறப்பன்று சந்தேகநபர் சிங்கபுர பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குச் சென்று, அந்த வீட்டாரை தாக்கி அச்சுறுத்தியுள்ளதாகவும், இதன்போது சந்தேகநபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை நீக்கிக் கொள்ளுமாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் இருவரையும் புதுக்கடை இலக்கம் இரண்டு நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்த உள்ளனர். சந்தேகநபர்களுக்கு எதிராக அபாயகரமான கூரிய ஆயுதத்தை வைத்திருந்தமை மற்றும் தண்டனை சட்டக் கோவைக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad