அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதால் நாட்டு மக்கள் தங்களின் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் - மக்கள் விடுதலை முன்னணி - News View

About Us

About Us

Breaking

Sunday, January 3, 2021

அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதால் நாட்டு மக்கள் தங்களின் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் - மக்கள் விடுதலை முன்னணி

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்திய பாதுகாப்பு அம்சங்களுக்கு புறம்பாக அரசாங்கம் செயற்பட்டு தேவையற்ற விடயங்களுக்கு விளம்பரம் வழங்கியதால் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் சுற்று தீவிரமடைந்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் முதல் சுற்றின்போது சுகாதார தரப்பினர் வலியுறுத்திய பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மக்கள் முறையாக பின்பற்றினார்கள். இதனால் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் காணப்பட்டது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் சுற்று குறுகிய காலத்துக்குள் தீவிரமடைந்துள்ளது. 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுத்திய பாதுகாப்பு வழிமுறைகளை விடுத்து அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டது. உள்ளூர் மட்டத்தில் தயாரித்த பாணம் மற்றும் சிகிச்சை முறைமைகளை சுகாதார அமைச்சர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் இலவசமாக விளம்பரம் செய்தார்கள். அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் மக்கள் சுகாதார வழிமுறைகளை தவிர்த்தார்கள்.

தற்போது ஒரு நாளைக்கு கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 500 க்கும் 600 க்கும் இடைப்பட்டதாக உள்ளது. சுகாதார தரப்பினர் மீது நாட்டு மக்கள் தற்போது நம்பிக்கை இல்லாமல் உள்ளார்கள். சுகாதார தரப்பினரது செயற்பாடுகளை முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாயசிங்க கடுமையாக விமர்சித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை சேவை வீழ்ச்சியடைந்துள்ளதால் பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் உக்ரைன் நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வரவழைக்கப்படவில்லை.

அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் ரஷ்ய நாட்டுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இலாபமடையும் வகையில் சுற்றுலாத்துறை சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறை சேவையினை ஆரம்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து சுற்றுலாத்துறை சபை தயாரித்த 79 பக்கங்களையுடைய அறிக்கை தற்போது செயற்படுத்தப்பட்டவில்லை.

உக்ரைன் நாட்டில் 11 இலட்சம் பேர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். சுமார் 19 ஆயிரம் பேர் இறந்துள்ளார்கள் இவ்வாறான நிலையில் உக்ரைன் நாட்டில் இம்மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். அத்துடன் பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் உக்ரைன் நாட்டு பிரஜைகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள் இவர்களிலும் தற்போது 6 பேர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் சுற்றின் மூலப்பரவல் தொடர்பில் இதுவரையில் அரசாங்கம் உறுதியாக அறிவிக்கவில்லை. ஆனால் உக்ரைன் நாட்டு பிரஜை ஊடாகவே கொவிட்-19 வைரஸ் தொற்று பரவியது என அனுமானிக்கப்படுகிறது. அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது. ஆகவே நாட்டு மக்கள் தங்களின் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment