அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம் - வன்முறையை தூண்டினால் நிரந்தரமாக நீக்கப்படும் எச்சரிக்கை விடுத்தது டுவிட்டர் நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 6, 2021

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம் - வன்முறையை தூண்டினால் நிரந்தரமாக நீக்கப்படும் எச்சரிக்கை விடுத்தது டுவிட்டர் நிறுவனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்று வந்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது, திடீரென பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இது ஒரு புறமிருக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் பேசினார்.

டிரம்பின் பேச்சால் உணர்ச்சிவசப்பட்ட அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினரை மீறி நுற்றுக்கணக்கானோர் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய டிரம்ப் தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். 

அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் வேகமாக பரவியது. இதையடுத்து, வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கினர்.

குறிப்பாக, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக பேசிய வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அவர் தனது அதிகாரப்பூர்வ தனிப்பட்ட டுவிட்டர் பக்கமான @realDonaldTrump பக்கத்தில் இருந்து சில டுவிட்டுகள் செய்தார்.

இந்த டுவிட்டுகள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததால் அவற்றை டுவிட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது. மேலும், விதிகளை மீறியதற்காக ஜனாதிபதி டிரம்பின் @realDonaldTrump பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.

அடுத்த 12 மணி நேரம் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை டிரம்ப் பயன்படுத்த முடியாத நிலைக்கு முடக்கப்பட்டுள்ளது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னரும் தொடர்ந்து டிரம்ப் வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் அவரின் @realDonaldTrump பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிரம்பின் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை 88 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment