அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு வெளியேயும், உள்ளேயும் குவிந்த டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் தோல்வி அடைந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ள மறுத்து வரும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்த வெற்றியை ஏற்று சான்றிதழ் தராமல் தேர்தல் முடிவுகளை நிராகரிக்கும்படி துணை ஜனாதிபதி மைக் பென்சை வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அப்போது டிரம்ப் ஆதரவு கலவரக் கும்பல் நாடாளுமன்றத்தில் புகுந்தது.
கேப்பிடல் கட்டடத்தில் என்ன நடந்தது?
சில கலவரக் காரரர்கள் பக்கச் சுவற்றைப் பிடித்து ஏறிச் சென்று நாடாளுமன்ற செனட் அவைக்குள் நுழைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவைத் தலைவர் நான்சி பெலோசி அலுவலகத்திலும் கலவரக்காரர் ஒருவர் புகுந்ததைக் காட்டும் படம் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முதலில் தேர்தல் சபை உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பிறகு அவர்கள் ஜனாதிபதியை தேர்வு செய்ய வாக்களிப்பார்கள்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இப்படி தேர்தல் சபை உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை டிசம்பர் 14ம் திகதி செலுத்தி அவற்றை சீலிட்ட கவர்களில் அனுப்பி வைத்தனர். அந்த வாக்குகள் புராதன மகாகனி மரப் பெட்டிகளில் வைத்து கேப்பிட்டல் கட்டடத்துக்கு புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டது.
அந்த வாக்குகளை அமெரிக்க நாடாளுமன்றத்தில் எண்ணும் பணி நடந்து கொண்டிருந்த நிலையில் இந்தக் கலவரம் நடந்துள்ளது. வாக்குகளை எண்ணி முடித்து பைடனின் வெற்றியை அங்கீகரித்து நாடாளுமன்றம் சான்றிதழ் அளிக்க வேண்டும்.
இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் போலீசாரால் வெளியேற்றப்பட்டனர். எனினும் இந்த வாக்குச் சீட்டுகள் காப்பாற்றப்பட்டதாக ஒரு செனட் உறுப்பினர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக இந்த வாக்குச் சீட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு ஓராண்டு காலத்துக்கு பொதுமக்கள் விரும்பினால் சரிபார்ப்பதற்காக ஃபெடரல் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
இந்தக் கலவரத்தில் ஊடகங்கள் தாக்கப்பட்டன. இதையடுத்து வாஷிங்டன் டிசி-யில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தை தொடர்ந்து தனது ஆதரவாளர்களைத் திரும்பிப் போகும்படி டிரம்ப் வேண்டுகோள் விடுக்கும் வீடியோவை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அகற்றியுள்ளன.
அந்த வீடியோவில் ஆதரவாளர்களை திரும்பிப் போகச் சொல்லும் அதே நேரம், அவர் தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக ஆதாரமில்லாமல் மீண்டும் குற்றம்சாட்டினார்.
முன்னாள் ஜனாதிபதியும் டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான ஜோர்ஜ் புஷ் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார்.
பெண் மரணம், 13 பேர் கைது, 5 ஆயுதங்கள் சிக்கின
கலவரத்தில் சுடப்பட்ட ஒரு பெண் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது பெயரை அவர்கள் வெளியிடவில்லை.
இந்தக் கலவரம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வாக்குகளை எண்ணும் பணி இரவு மீண்டும் தொடரும்
புதன்கிழமை இரவே மீண்டும் தேர்தல் சபை வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்றத்தில் தொடரும் என்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைத் தலைவர் நான்சி பெலோசி தெரிவித்தார்.
தலைநகரில் 2,700 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து கலவரக் காரர்கள் கலைந்து சென்றனர்.
உலகத் தலைவர்கள் கண்டனம்
அண்டை நாடான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்கள் இதனை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறி கண்டித்துள்ளனர்.
வாஷிங்டன் டிசியில் நடக்கும் கலவரம், வன்முறை குறித்த செய்திகளைப் பார்ப்பது வேதனை தருகிறது என்று தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
இது பற்றி டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, "அமைதியாகவும், ஒழுங்கான முறையிலும் ஆட்சி மாற்றம் நடைபெறுவது தொடரவேண்டும். சட்ட விரோதப் போராட்டங்கள் மூலமாக ஜனநாயக நடைமுறை சிதைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment