கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுப்பதில் தனக்கும், சுதந்திர கட்சிக்கும் உடன்பாடு இல்லை - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி - News View

Breaking

Post Top Ad

Friday, January 22, 2021

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுப்பதில் தனக்கும், சுதந்திர கட்சிக்கும் உடன்பாடு இல்லை - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

(ஆர்.யசி)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இலங்கைக்கு மிக அவசியமான ஒன்றாகும். அதனை இந்தியாவிற்கு கொடுப்பதில் தனக்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் எந்த உடன்பாடும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு கிழக்கு முனையத்தை கொடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் தான் அதனை தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுப்பதில் துறைமுக தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் இது குறித்து முன்னாள் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே இவற்றை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டு கோரிக்கையாகவே இது அமைந்திருந்தது. அவர்கள் இணைந்தே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் கோரிக்கையை முன்வைத்திருந்தனர். ஆனால் கிழக்கு முனையத்தை விடவும் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. 

எனவே இவ்விரு நாடுகளிடமும் பணம் இருக்கின்ற காரணத்தினால் புதிதாக நிர்மாணிக்கும் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதில் இவ்விரு நாடுகளும் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும், கிழக்கு முனையத்தில் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது எனவும் இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டு தலைவர்களுக்கு நான் தெரிவித்திருந்தேன்.

அதேபோல் கிழக்கு முனையத்தை ஒருபோதும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க மாட்டேன் என துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடமும் நான் வாக்குறுதி கொடுத்திருந்தேன். எனவே இப்போதும் எனதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினதும் உறுதியான நிலைப்பாடு இதுவேயாகும். 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு வெளிநாட்டிற்கும் கொடுக்க நாம் ஒருபோதும் இணங்க மாட்டோம். எனது ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த குழப்பங்களில் ஏனைய தரப்பினர் இந்த முனையத்தை கொடுக்க முயற்சிகளை எடுத்தனர். ஆனால் நான் தடுத்து நிறுத்தியிருந்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad