கரும்புத் தோட்டக் காணி தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் - கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 19, 2021

கரும்புத் தோட்டக் காணி தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் - கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் வருகின்ற ஸ்கந்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கரும்புத் தோட்டக் காணியினை அமைப்புகளின் பெயரில் அபகரித்து பகிர்ந்து கொள்ள அரசியல் தரப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அக்கராயன் பிரதேச பொதுமக்களும் சில அமைப்புகளும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சீனித் தொழிற்சாலை இயங்கி வந்த காணியினை மீண்டும் அவ்வாறு நிலைக்கு கொண்டு வருவதற்கு தமிழ் மக்களுக்கு சாதகமான கடந்த ஆட்சிக் காலத்தில் எவ்வித முயற்சிகளும் எடுக்காத அரசியல் தரப்புக்கள் தற்போது குறித்த காணியினை கூட்டுறவு அமைப்புகளின் பெயரில் பெற்று முறைகேடான வகையில் பகிர்ந்தளிக்கவுள்ளதான தகவல்கள் தமக்கு அறியக் கிடைத்துள்ளதாகவும், அதற்கான பட்டியல்கள் முன்னாள் போராளிகள் மற்றும் காணியற்றவர்கள் என்ற போர்வையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை குறித்த ஒரு அரசியல் கட்சியினைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே கிளிநொச்சி கரும்புத் தோட்டக் காணி தொடர்பில் அரச அதிகாரிகள் முறையான நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரும்புத் தோட்டக் காணியினை வைத்தியர் த.சத்தியமூர்த்தி அவர்கள் பயன்படுத்தி வருவதாக குறித்த அரசியல் தரப்பினரால் ஆதாரமற்று குற்றம் சுமத்தி வருகின்ற நிலையில் அவரிடம் இது தொடர்பில் நாம் வினவிய போது, "சில வருடங்களுக்கு முன்னர் தொழில் முயற்சி ஒன்றின் ஊடாக அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க எத்தனித்தபோதும் சிலரின் குறுக்கீடு காரணமாக உடனடியாகவே முயற்சியை கைவிட்டு விட்டேன். இப்போது எனக்கு எந்த தொடர்பும் இல்லை. திட்டமிட்டு எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் என் மீதான அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. தற்போது அக்காணிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை அதனை நான் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளேன் என்றார்.

எனவே இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் வினவிய போது, குறித்த கரும்புத் தோட்டக் காணி தொடர்பில் இதுவரை தீர்க்கமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை, ஆரம்பத்தில் குத்தகைக்கு (லீசிங்) எடுத்து பயன்படுத்தியவர்கள் என்ற அடிப்படையில் இவ்வருடமும் (2020) அவர்கள் பயிர்ச் செய்கை மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கரும்புத் தோட்டக் காணி தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. எனவே எதிர்காலத்தில் குறித்த காணியினை என்ன செய்வது யாருக்கு வழங்குவது போன்ற விடயங்கள் தீர்மானிக்கப்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

வீரகேசரி

No comments:

Post a Comment