(எம்.மனோசித்ரா)
சீனிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் அரசாங்கத்திற்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் இறக்குமதி செய்யப்படவுள்ள 2 இலட்சம் மெட்ரிக் தொன் சீனி மூலம் அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களுக்கு 990 கோடி ரூபா வருமானம் கிடைக்கவுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கபட்டுள்ளன. 2015 க்கு முன்னர் குறிப்பிட்டவொரு நிறுவனத்திற்கு மாத்திரம் நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி விநியோகத்திற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இதன்போது இடம்பெற்ற மோசடிகளைப் போன்று தற்போதும் மோசடிகள் ஆரம்பமாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாகவே மின்சாரத்துறை பாரிய வீழ்ச்சியடைந்து நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.
இதேபோன்றுதான் அண்மையில் சீனி இறக்குமதி வரி குறைப்பில் பாரிய மோசடிகள் இடம்பெற்றன. ஆனால் இதன் காரணமாக அரசாங்கத்திற்கு 11400 கோடி ரூபாய் வருமானம் அற்று போயுள்ளதோடு மக்களுக்கும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை.
திரைசேரியில் நிதி இல்லாத போதிலும் இது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் அரசாங்கம் அண்மையில் அதிகளவான நாணயத் தாள்களை அச்சிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 3 மாதங்களில் 2 இலட்சம் மெட்ரிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்படவுள்ளதோடு 990 கோடி ரூபா வருமானம் வர்த்தகர்களுக்கு இலாபமாக கிடைக்கும். இது நாட்டுக்கு பாரிய நஷ்டமாகும்.
இதேவேளை சிகரட்டுக்களை களஞ்சியப்படுத்துவதற்கு அரச வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.
கொவிட் இன்னும் சமூகப்பரவலாகவில்லை என்று பொய் கூறுகின்றனர். கொவிட் தொற்று அதிகரிக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னோக்கிச் செல்கிறது. ஆனால் சீனா எமக்கு அடுத்த மட்டத்தில்தான் உள்ளது. கொவிட் இரண்டாம் அலையில் அரசாங்கம் பொறுப்பற்று செயற்பட்டுள்ளமை இதன் மூலம் தெளிவாகிறது என்றார்.
No comments:
Post a Comment