யால பூங்காவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து, உக்ரைன் பயணிகளின் சிகிரியா, பொலன்னறுவை சுற்றுலா தற்காலிக இடைநிறுத்தம் - News View

Breaking

Post Top Ad

Monday, January 4, 2021

யால பூங்காவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து, உக்ரைன் பயணிகளின் சிகிரியா, பொலன்னறுவை சுற்றுலா தற்காலிக இடைநிறுத்தம்

இன்றும் (04) நாளையும் (05) சிகிரியா மற்றும் பொலன்னறுவைக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த உக்ரேனிய சுற்றுலாப் பயணக் குழுவின் சுற்றுலா நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா அமைச்சினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த பிரதேசங்களுக்கு பொறுப்பான மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள சுற்றுலாத் துறையை மீளுயிரூட்டும் நோக்கில், ஒரு முன்னோட்டத் திட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ள, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உக்ரைன் சுற்றுலா குழுவினரை இலங்கையிலுள்ள முக்கிய தலங்களை பார்வையிடும் வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, அவர்கள் இன்று (04) பிற்பகல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொலன்னறுவை மற்றும் மின்னேரியா, கவுடுல்ல தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததோடு, நாளையதினம் (05) சிகிரியாவிற்கும் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

ஆயினும், இரு தினங்களுக்கு முன்னர் யால பூங்காவில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் சுகாதாரப் பிரிவினர் மற்றம் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து சுற்றுலாஅமைச்சுடன் மேற்கொண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து குறித்த சுற்றுலாக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.

யால பூங்காவை பார்வையிடச் சென்ற உக்ரைன் நாட்டவர்களை ஏற்றிச் சென்ற சபாரி ஜீப் வண்டி சாரதிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின அழைப்பின் பேரில் ஜீப் வண்டி ஒன்றுக்கு ரூபா. 5,000 வீதம் தருவதாகக் கூறி 28 ஜீப் வண்டிகளை குறித்த பணிக்காக அழைத்ததாகவும், தாம் இதன்போது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே நடந்து கொண்டதாகவும் தெரிவித்த அவர்கள், தங்களுக்கு தனிமைப்படுத்தல் தொடர்பான எவ்வித அறிவிப்புகளை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என தெரிவித்திருந்தனர்.

அத்துடன் தாம் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டால் தமது வருமானம் பாதிப்படையும் எனவும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் குறித்த சுற்றுலா நடவடிக்கை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பிற்பகல் 5.00 மணியளவில், 28 ஜீப் வண்டிகளும் யால இராணுவ முகாமிற்கு முன்னால் நிறுத்தப்பட்டதோடு, இரவு 11.30 மணியளவில் விசேட பஸ் ஒன்றில் அனைத்து சாரதிகளும் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad