தேசிய சொத்துக்களை விற்பதற்கு அரசாங்கத்திடம் மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை, மந்தமாக செயற்படாமல் துரிதமாக செயற்படுமாறு கோருகின்றோம் : சிங்கள ராவய அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, January 31, 2021

தேசிய சொத்துக்களை விற்பதற்கு அரசாங்கத்திடம் மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை, மந்தமாக செயற்படாமல் துரிதமாக செயற்படுமாறு கோருகின்றோம் : சிங்கள ராவய அமைப்பு

(எம்.மனோசித்ரா)

நாட்டு மக்கள், துறைமுக தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பலரதும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவிற்கு வழங்கப்படுமானால் அது நாட்டின் இறையாண்மைக்கும் சுயாதீனத் தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு தேசிய சொத்துக்களை விற்பதற்காக இந்த அரசாங்கத்திடம் மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை என்று சிங்கள ராவய அமைப்பின் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகைகையில், தேசிய சொத்துக்களை விற்பதற்கு அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது. கிழக்கு முனையம் அரசாங்கத்திடமிருந்து கைநழுவிப் போகுமானால் அது நாட்டுக்கு பாரிய நெருக்கடியாகும். நாட்டின் பொருளாதாரம், சுயாதீனத்தன்மை என்பவற்றுக்கு ஏற்படும் அச்சுறுத்தலுமாகும்.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பௌத்த தேரர்களும் மக்களும் இணைந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவையும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் ஆட்சிக்கு கொண்டுவரவில்லை. எனினும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் தற்போது தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளுக்கு பதிலாக வர்த்தகர்கள் நாட்டை ஆட்சி செய்யும் நிலை தோன்றியுள்ளது.

அரசாங்கமும், குறித்த வர்த்தகர்களும், ஜனாதிபதிக்கு தெரியாமல் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்களா? அல்லது ஜனாதிபதிக்கு தெரிந்தே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா? என்பது கேள்விக்குறியாகவுள்ளது. 

அதிகாரம் கைநழுவிச் சென்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று தனிமையடைந்த பின்னர் இவை பற்றி சிந்திப்பது பிரயோசனமற்றது. எனவே அதிகாரம் கைகளிலிருக்கும் போதே சிந்தித்து செயற்படுமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகின்றோம்.

நாட்டு மக்களுக்கு மாற்று வழியொன்று இல்லாததன் காரணமாகவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அதிகாரத்தை வழங்கினார்கள். எனவே மந்தமாக செயற்படாமல் இவ்விடயத்தில் துரிதமாக செயற்படுமாறு கோருகின்றோம்.

No comments:

Post a Comment