அடக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கும், அவரது குடும்ப உறவினர்களுக்கும் கொரோனா தொற்றில்லை - பீ.சீ.ஆர். பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தினார் பொது சுகாதாரப் பரிசோதகர் - News View

About Us

About Us

Breaking

Friday, January 15, 2021

அடக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கும், அவரது குடும்ப உறவினர்களுக்கும் கொரோனா தொற்றில்லை - பீ.சீ.ஆர். பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தினார் பொது சுகாதாரப் பரிசோதகர்

மினுவாங்கொடை, கல்லொழுவை பிரதேசத்தில், அண்மையில் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கோ மற்றும் அப்பெண்ணின் குடும்ப உறவினர்களுக்கோ கொரோனா தொற்று இல்லை என, பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

மரணித்த பெண்ணின் குடும்ப உறவினர்களுக்கு மேற்கொண்ட பீ.சீ.ஆர். பரிசோதனையின் பின்னரே, இத்தகவலை அவர் வெளியிட்டுள்ளார். 

பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரியை அறிவுறுத்தாமல், இப்பிரதேசத்தில் மரணித்த பெண்ணொருவரின் உடலை அடக்கம் செய்திருப்பது தொடர்பில், மினுவாங்கொடை பொலிஸில் கிராம சேவை அதிகாரியினால் கடந்த 8 ஆம் திகதி இரவு செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டையடுத்து.
 
இது தொடர்பிலான அறிக்கையொன்றினை குடும்பத்தார் மூலமாகப் பெற்றுத் தருமாறு, மினுவாங்கொடை பொலிஸாரினால் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் வரவழைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினர், மரணித்து அடக்கம் செய்யப்பட்ட குறித்த பெண்ணின் குடும்ப உறவினர்களிடம் பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டபோதே, "எவருக்கும் கொரோனா தொற்றில்லை" என உறுதிப்படுத்தியுள்ளார். 

இதனை மையமாக வைத்து, "மரணித்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. இதனால், இவரை அடக்கம் செய்ததில் தவறில்லை" எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, "மரணித்த பெண் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுமில்லை. அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடனான தொடர்புகளை வைத்திருந்தவராக இருக்கவுமில்லை. இந்நிலையில், இப்பெண் நீண்ட காலமாக சுகயீனமாக (நோயாளியாக) இருந்துள்ளார். 

இதன் காரணமாகவே இவர் மரணித்துள்ளார்" என்ற விபரங்கள் அடங்கிய விரிவான தகவல்களும் குடும்பத்தாரிடமிருந்து தெளிவாகப் பெறப்பட்டு, இதன் அறிக்கையும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவு பெற்றதாகவும், பிரதேச சுகாதாரப் பரிசோதகர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment